ஐக்கிய அரபு எமிரேட்சில் புதிய கிரிமினல் சட்டம்; ஜன.,1 முதல் அமல்
30 Nov,2021
அடுத்த ஆண்டு முதல் புதிய கிரிமினல் சட்டம் அமலுக்கு வர உள்ளதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவித்துள்ளது.
மேற்காசியாவைச் சேர்ந்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதன் வரலாற்றில் இல்லாத வகையில் இந்தாண்டு ஏராளமான சட்ட சீர்திருத்தங்களை செய்துள்ளது. அண்டை நாடான சவுதி அரேபியா அன்னிய முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் பல கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. அதை பின்பற்றி ஐக்கிய அரபு எமிரேட்சும் சட்ட சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் புதிய கிரிமினல் சட்டம் அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் அமலுக்கு வர உள்ளதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவித்துள்ளது. எனினும் அது குறித்த விபரங்களை வெளியிடவில்லை. அதேநேரத்தில் திருமணத்திற்கு முன் குழந்தை பெறுவது தொடர்பான சட்டம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி திருமணத்திற்கு முன் கர்ப்பமாகும் பெண் அவர் எந்த நாட்டினராக இருந்தாலும் பிறக்கும் குழந்தைக்கு பொறுப்பேற்க வேண்டும். திருமணமாகி இருந்தால் அதற்கான சான்று அடையாள அட்டைகள் பயண ஆவணங்கள் ஆகியவற்றை வழங்க வேண்டும். இந்த விதிமுறையை மீறும் பெண் அல்லது தம்பதியருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வணிக நிறுவனங்கள் 'ஆன்லைன்' வர்த்தக பாதுகாப்பு காப்புரிமை குடியிருப்பு போதை மருந்து தடுப்பு மற்றும் சமூக பிரச்னைகள் தொடர்பாக புதிய கிரிமினல் சட்டம் இருக்கும் என தெரிகிறது. அதுபோல திருமணத்திற்கு முந்தைய பாலியல் உறவு மது அருந்துவது ஆகியவை கடுமையான குற்றப் பிரிவில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. வர்த்தகர்கள் மற்றும் திறமையான வல்லுனர்களை ஈர்க்க நீண்ட கால 'விசா' வழங்குவது உள்ளிட்டவை தொடர்பான சட்ட சீர்திருத்தங்களையும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செய்துள்ளது.