லிபியா: அதிபர் தேர்தலில் கடாபி மகன் போட்டியிட தடை
26 Nov,2021
லிபியா நாட்டின் அதிபராக 1969-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டுவரை பதவி வகித்து கொடி கட்டிப்பறந்தவர் முஅம்மர் அல் கடாபி. 2011-ம் ஆண்டு அக்டோபர் 20-ம் நாள் அவர் கிளர்ச்சிப்படையினரால் உயிருடன் பிடிக்கப்பட்டு, உடனடியாக சுட்டுக்கொல்லப்பட்டார். அங்கு தற்போது முகமது அல் மெனிபி என்பவர் அதிபராக உள்ளார்.
இந்தநிலையில் அங்கு புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கு முதல் கட்ட தேர்தல் அடுத்த மாதம் 24-ந் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் ஜனவரி 24-ந் தேதியும் நடைபெற உள்ளது.
அங்கு அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு 60 வேட்புமனுக்கள் தாக்கலாகி உள்ளன. பெண் உரிமைப்போராளியான லீலாபென் கலிபா (வயது 46) மட்டும்தான் பெண் வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு கொல்லப்பட்ட கடாபியின் மகன் சையிப் அல் இஸ்லாம் கடாபி கடந்த 14-ந் தேதி வேட்பு மனுதாக்கல் செய்தார். ஆனால் அவர் மீதான போர்க்குற்ற வழக்கில் சர்வதேச கிரிமினல் கோர்ட்டு பிறப்பித்த பிடிவாரண்டு நிலுவையில் உள்ளது. அவர் போட்டியிடுவதாக அறிவித்து களம் இறங்கியது அங்கு பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதன் காரணமாக அவர் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவரது வேட்பு மனுவை அந்த நாட்டின் தேர்தல் கமிஷன் நிராகரித்துள்ளது.
இதேபோன்று வலிமை வாய்ந்த தலைவராக அங்கு கருதப் படுகிற கல்பா ஹப்தாரின் வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது. அவர் அமெரிக்க கோர்ட்டுகளில் வழக்குகளை எதிர் கொள்வதால் அவரது வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது. லிபியா ராணுவ வக்கீல்கள்தான் இவர்கள் இருவரது வேட்புமனுக்களையும் நிராகரிக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷனை கேட்டுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.