அமெரிக்க அதிபராக 1.25 மணி நேரம் இருந்த கமலா ஹாரிஸ்: காரணம் என்ன?
20 Nov,2021
அமெரிக்காவின் துணை அதிபரான கமலா ஹாரிஸிடம் (Kamala harris)சுமார் 1 மணி நேரம் 25 நிமிடங்களுக்கு அதிபருக்கான அதிகாரங்கள் வழங்கப்பட்டன. இதன் காரணமாக அவர் தற்காலிக அதிபராக இருந்தார்.
அமெரிக்க அதிபராக ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் (Joe biden) மற்றும் துணை அதிபராக அதேக் கட்சியைச் சேர்ந்த இந்திய வம்சாவளி பெண்மணியான கமலா ஹாரிஸ் ஆகியோர் உள்ளனர். தமிழகத்தின் மன்னார்குடி அருகே அவரது பூர்வீக கிராமமான துளசேந்திரபுரம் கமலா ஹாரிஸின் பூர்விக ஊர் ஆகும்.
அதிபர் ஜோ பைடன் வழக்கமான உடல் பரிசோதனைக்காக வால்டர் ரீட் தேசிய இராணுவ மருத்துவ மையத்தில் நேற்று அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பாக அதிபருக்கான அதிகாரங்கள் அனைத்தையும் அவர் கமலா ஹாரிஸிடம் வழங்கியதாக வெள்ளை மாளிகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
காலை 10.10 மணிக்கு கமலா ஹாரிஸிடம் அதிபருக்கான அதிகாரங்கள் தற்காலிகமாக வழங்கப்பட்டது. பின்னர், 11.35 மணிக்கு அதிபர் ஜோ பைடன் சிகிச்சை முடிந்து திரும்பியதும் தனது பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். இதன் மூலம் அமெரிக்காவின் தற்காலிக அதிபர் பதவியை ஏற்றுகொண்ட முதல் பெண் என்ற சிறப்பையும் கமலா ஹாரிஸ் பெற்றார்
அமெரிக்க அரசியலில் இதுபோன்ற தற்காலிக அதிபர் பொறுப்பேற்பு நிகழ்வு மிகவும் அரிது. 1985ம் ஆண்டு அப்போதைய அதிபர் ரொனால்ட் ரீகன் மருத்துவ சிகிச்சைக்கு சென்றபோது ஜார்ஜ் ஹெச்.டபியூ. புஷ் தற்காலிக அதிபராக இருந்தார். இதேபோல், 2002 மற்றும் 2007ம் ஆண்டு ஜார்ஜ் புஷ் ஆட்சிக் காலத்தில் டிக் செனி (Dick Cheney) தற்காலிக அதிபராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.