ஓரின திருமணத்திற்கு சுவிட்சர்லாந்து அனுமதி
18 Nov,2021
சுவிட்சர்லாந்து அரசு ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு, சட்ட ரீதியிலான அனுமதியை வழங்கியுள்ளது.
மேற்கு ஐரோப்பாவில் ஓரின திருமணத்தை சட்டப்படி அங்கீகரிக்காத ஒரு சில நாடுகளில் சுவிட்சர்லாந்தும் ஒன்று. இந்நிலையில், சுவிட்சர்லாந்தில் இரு மாதங்களுக்கு முன் 'அனைவருக்கும் திருமண உரிமை சட்டம்' பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேறியது. இதையடுத்து ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்படுவதாக, சுவிட்சர்லாந்து அரசு அறிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு ஜூலை 1 முதல் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட உள்ளது. அதன்பின் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணமாகாமல் சேர்ந்து வாழ்வது சட்ட மீறலாக கருதப்படும். ஓரின தம்பதியர் குழந்தைகளை தத்தெடுக்கவும், ஓரினச் சேர்க்கையாளர்கள் வெளிநாடுகளைச் சேர்ந்த தன் பாலினத்தவரை திருமணம் செய்து குடியுரிமை பெறவும் முடியும்.
புதிய சட்டத்தின்படி, 2022 ஜனவரி 1 முதல் சுவிட்சர்லாந்தில் வசிக்கும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஓரின தம்பதியருக்கு திருமண அங்கீகாரம் வழங்கப்படும். அவர்களுக்கு தற்போது திருமணமாகாத ஜோடி என்ற அந்தஸ்து தான் வழங்கப்படுகிறது.