பிரிட்டிஷ் கொலம்பியாவை புரட்டிப் போட்ட வெள்ளம்!
17 Nov,2021
பிரிட்டிஷ் கொலம்பியாவில் பெய்த கடும் மழை காரணமாக நிலச்சரிவுகள் ஏற்பட்டு, பல வீதிகள் மூடப்பட்டன. அத்துடன், ஒரு நகரத்தைச் சோ்ந்த மக்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, அப்பகுதியூடாகச் செல்லும் எண்ணெய்க் குழாய்கள் மூடப்பட்டன.
வான்கூவருக்கு வட-கிழக்கே சுமார் 200 கி.மீ. தொலைவில் உள்ள மெரிட் நகரம் மூடப்பட்டு அங்கிருந்த 7,100 பேரும் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தப்பட்டனர்.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை 200 மி.மீ. மழை பெய்தது. இது சராசரியாக இங்கு ஒரு மாதத்தில் பதிவாகும் மழை வீழ்ச்சியை ஒத்ததாகும். அத்துடன், அடுத்து வந்த நாட்களிலும் தொடர்ந்த மழையால் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கி, போக்குவரத்து பாதிக்கப்பட்டது என பிரிட்டிஷ் கொலம்பியாவின் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
கடும் மழை, வெள்ளம் மற்றும் கடும் காற்று காரணாக அல்பர்ட்டாவிலிருந்து பசிபிக் கடற்கரைக்கு கச்சா எண்ணெய் எடுத்துவரும் எண்ணெய்க் குழாய்களை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அகாசிஸ் நகருக்கு அருகே இரண்டு மண்சரிவுகள் ஏற்பட்டன. இதனால் பாதை மூடப்பட்டு போக்குவரத்து செய்ய முடியாமல் 80 முதல் 100 வரையான கார்கள் மற்றும் டிரக்குகளில் மணிக்கணக்கில் மக்கள் சிக்கியிருந்தனர். பின்னர் மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று அவர்களை பாதுகாப்பாக மீட்டு வெளியேற்றியதாக பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண பாதுகாப்பு அமைச்சர் மைக் பார்ன்வொர்த் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
வான்கூவருக்கு வெளியே உள்ள அபோட்ஸ்போர்ட் நகரில், வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சோ்ந்த 100 குடும்பங்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டன