ஆஸ்திரேலியாவில் நான்கு நாட்களாக மணல் பகுதியில் சிக்கிய குடும்பம் மீட்பு
16 Nov,2021
அந்த குடும்பத்தின் வேன் சேற்றில் சிக்கியதால் எங்கும் நகர முடியவில்லை.
லிண்ட்சே, ஓரி ஜாவ்ரோஸ் தம்பதி மற்றும் அவர்களின் இரண்டு சிறு குழந்தைகளான ஜாய், ஜேன் ஆகியோர் கனமழைக்குப் பிறகு அருகிலுள்ள நகரமான ஓட்னாடாட்டாவிலிருந்து 150 கிமீ தொலைவில் சிக்கிக்கொண்டனர்.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, அவர்கள் அவசர உதவி சேவையின் உதவியை நாடினர், ஆனால் அப்பகுதியில் வெள்ளம் சூழ்ததால் அவர்களை மீட்புக்குழுவினர் அடைய ஒரு வாரம் ஆகலாம் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை, வானிலை சீராக இருந்ததால் இந்த குடும்பத்தை மீட்க ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டது.
இது தொடர்பாக தெற்கு ஆஸ்திரேலிய காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மீட்கப்பட்ட குடும்பத்தினர் இரவு தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்து அவர்கள் தங்கள் சொந்த ஏற்பாட்டின்பேரில் வீடு திரும்புவர்,” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த வார தொடக்கத்தில், உள்ளூர் நிர்வாகம் அவர்களின் தேவைக்காக அவசரகால பொருட்களை ஹெலிகாப்டர் மூலம் வீசியது. அவர்களிடம் தண்ணீர் மற்றும் செயற்கைக்கோள் போன் இருந்தன.
அந்த குடும்பத்திற்கு தேவையான மற்ற பொருட்களும் வேனில் இருந்தன.
பெர்த் குடும்பம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்றதுடன், தங்களது பயணம் குறித்த தகவல்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகின்றனர். சமீபத்தில், அவர் சமூக ஊடகங்களில், "எங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள தொலைதூர பகுதிகளுக்கு நாங்கள் செல்கிறோம்" என்று எழுதியிருந்தார். ஆனால், சென்ற இடத்தில்தான் இதுபோன்ற அசம்பாவிதத்தை அவரும் அவரது குடும்பமும் எதிர்கொண்டுள்ளனர்.
உள்ளூர் ஊடகங்களின்படி, அவர்கள் பயணம் செய்த வேன் இன்னும் அதே இடத்திலேயே உள்ளது.