கனமழை கனேடிய மாகாணத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
15 Nov,2021
கனேடிய மாகாணமான பிரிட்டிஷ் கொலம்பியாவில் கொட்டித்தீற்கும் கனமழையால் பிரதான சாலைகள் பல மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனமழை காரணமாக மாகாணத்தின் பல பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் மண்சரிவு ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ள அபாயம் காரணமாக பிரதான சாலைகள் பல மூடப்பட்டுள்ளதால், வாகன சாரதிகள் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என மாகாண நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Coquihalla-வின் தெற்குப் பாதைகளுக்கு மேல் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. காலை 10 மணியளவில், டோல் ரோடு மற்றும் ஸ்கலுலா கிரசன்ட் இடையே பாறைகள் சரிந்து விழுந்தது காரணமாக பிரதான சாலை 1 மூடப்பட்டது.
மட்டுமின்றி Coquihalla-வில் வெளியேறும் பகுதி 202 மற்றும் 217 ஆகிய பகுதிகள் மூடப்பட்டுள்ளதாகவும், பிரதான சாலை தொடர்பான அடுத்த தகவல் திங்கட்கிழமை வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதான சாலை 5 மூடப்பட்டுள்ளதால் வாகன சாரதிகள் பிரதான சாலை 3-ஐ பயன்படுத்தலாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மழை எச்சரிக்கை தொடர்ந்து நீடிப்பதால், நதிகள் நீர்மட்டம் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தொடர்புடைய பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.