உடனடியாக ஹெய்தி நாட்டிலிருந்து விட்டு வெளியேறுங்கள்... தன் குடிமக்களுக்கு கனடா உத்தரவு
12 Nov,2021
எரிபொருள் பிரச்சினை காரணமாக பாதுகாப்பான சூழல் குறைந்துவருவதைத் தொடர்ந்து, ஹெய்தி நாட்டிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு கனடா தன் குடிமக்களை வலியுறுத்தியுள்ளது.
கனடா, தனது அத்தியாவசியமற்ற அலுவலர்கள் அனைவரையும் ஹெய்தியிலுள்ள தனது தூதரகத்திலிருந்து வெளியேற்றி வருவதுடன், கனேடிய சுற்றுலாப்பயணிகளையும் உடனடியாக வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளது.
பாதுகாப்புக் குறைபாடு அதிகரிப்பு மற்றும் பயங்கர எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஹெய்தியிலுள்ள மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் வங்கிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கனடா இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
மருத்துவமனைகள் ஜெனரேட்டர்களை நம்பி உள்ளதால், எரிபொருள் பற்றாக்குறை, தண்ணீர் தட்டுப்பாட்டுக்கும் வழிவகுத்து, மருத்துவமனைகளையும் பாதித்துள்ளது.
இப்படிப்பட்ட ஒரு சூழல் நிலவுவதைத் தொடர்ந்து, அத்தியாவசியமற்ற கனேடிய பணியாளர்கள் மற்றும் தனது தூதரக அலுவலர்களின் குடும்ப உறுப்பினர்களையும் தற்காலிகமாக ஹெய்தியிலிருந்து வெளியேற்றுவதாக கனடா அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெய்தியின் தலைநகரான Port-au-Prince நகரில் அமைந்துள்ள கனேடிய தூதரகம், ஹெய்தியிலிருக்கும் கனேடியர்களுக்கு உதவுவதற்காக தற்போது செயல்பட்டு வருவதாக கனடா தெரிவித்துள்ளது.
புதனன்று, நீங்கள் அத்தியாவசியமற்ற காரணங்களுக்காக ஹெய்தியில் இருப்பீர்களானால், உங்களால் பாதுகாப்பாக வெளியேற முடியுமானால் ஹெய்தியை விட்டு வெளியேறுங்கள் என கனேடியர்களிடம் தெரிவித்த கனடா அரசு, தீவிர எரிபொருள் பற்றாக்குறை காரணமாக, ஒருவேளை நீங்கள் கடத்தப்படும் அபாயமும், அமைதியற்ற சூழலும் நிலவுவதால் ஹெய்திக்கு பயணிக்கவேண்டாம் என்றும் தன் குடிமக்களை அறிவுறுத்தியுள்ளது.
ஏற்கனவே, ஹெய்தியில் கடத்தப்பட்ட கிறிஸ்தவ அமெரிக்க மற்றும் கனேடிய மிஷனெரிகள் உட்பட 17 பேர் இன்னமும் மீட்கப்படாத நிலையில், கனடாவைப்போலவே அமெரிக்காவும் தன் குடிமக்களை உடனடியாக ஹெய்தியிலிருந்து வெளியேற வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.