30 ஆண்டுகளாக குடிநீராக டாய்லெட் தண்ணீர் விநியோகம் - ஜப்பானில் அதிர்ச்சி சம்பவம்!
10 Nov,2021
ஒசாகா பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள இந்த சர்ச்சைக்கு, அந்நாட்டு பத்திரிக்கைகள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். மேலும் சமூக வலைத்தளங்களிலும் இந்த தகவல் வைரலான நிலையில் நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஜப்பானில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கடந்த 30 ஆண்டுகளாக குடிநீராக டாய்லெட் தண்ணீர் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளிகள், பாதுகாவலர்கள் உள்ளிட்ட அனைவரும் அந்த நீரையே பருகியுள்ளனர். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டட விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டபோது, குடிநீருக்கான பைப் கனெக்ஷன் டாய்லெட்டுக்கும், டாய்லெட் தண்ணீர் கனெக்ஷன் குடிநீர் பைப்புகளுக்கும் இணைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
ஜப்பானில் இருக்கும் புகழ்பெற்ற ஓசாகா மருத்துவமனை பல்கலைக்கழகத்தில் இந்த தவறு நடந்துள்ளது. 1993ம் ஆண்டு இந்த மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. குடிநீர் மற்றும் டாய்லெட்டுக்கு என தனித்தனியாக தண்ணீர் கனெக்ஷன் கொடுக்கப்பட்டது. கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் நெருங்கிய நிலையில் மருத்துவமனையின் பல்வேறு பகுதிகளில் பழுது ஏற்பட்டுள்ளது. பைப் கனெக்ஷன்களும் மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து நோயாளிகளும், மருத்துவமனை ஊழியர்களும் தொடர்ச்சியாக புகார் எழுப்பி வந்த நிலையில், மருத்துவமனையில் புதிய கட்டடம் மற்றும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்கான ஆயத்த பணிகள் தொடங்கப்பட்டன.
அப்போது, தண்ணீர் கனெக்ஷன்களை சரிபார்த்தபோது, குடிநீருக்கான பைப் கனெக்ஷன் டாய்லெட்டுக்கும், டாய்லெட்டுக்கான பைப் கனெக்ஷன் குடிநீருக்கும் தவறுதலாக இணைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், மருத்துவமனையின் தண்ணீர் தரம் குறித்து வாரம் ஒருமுறை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு ஆய்வறிக்கைகள் சமர்பிக்கப்பட்டு வந்துள்ளது. அந்த அறிக்கையில், குடிநீரின் தரம் சிறப்பாகவும், சுவையாகவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு முதல் தண்ணீர் பிரச்சனை இல்லை என்றும், சுகாதாரப் பிரச்சனைகள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கை ஒன்றில்கூட குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தி ஜப்பான் முழுவதும் தீயாகப் பரவி, பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. ஒசாகா பல்கலைக்கழக மருத்துவமனையின் இயக்குநரும், துணைத்தலைவருமான கசுஹிகோ நகாதானி, புகாரை ஒப்புக்கொண்டு முன்னாள் நோயாளிகள் உள்ளிட்டோரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள மன்னிப்பு கடிதத்தில், ஒசாகா பல்கலைக்கழக வளாக மருத்துவமனையில் ஏற்பட்ட எதிர்பாராத தவறுக்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இந்த தவறு எதிர்பாராதவிதமாக நடந்துள்ளது. இதுகுறித்து இன்னும் முறையான விசாரணை செய்யப்படும். தற்போது பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 105 கட்டிடங்களுக்கும் தரமான மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒசாகா பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள இந்த சர்ச்சைக்கு, அந்நாட்டு பத்திரிக்கைகள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். மேலும் சமூக வலைத்தளங்களிலும் இந்த தகவல் வைரலான நிலையில் நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து விசாரணை செய்யப்பட்டு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன.