எச்சரிக்கை விடுத்த பில் கேட்ஸ்
07 Nov,2021
வருங்காலத்தில் பெரியம்மை காய்ச்சலை ஒரு உயிரியல் ஆயுதமாக, பரபரப்பான விமான நிலையங்களில் பயங்கரவாதிகள் பயன்படுத்தக் கூடும் என்று கோடீஸ்வரர் பில்கேட்ஸ் எச்சரித்துள்ளார்.
பயங்கரவாதிகளின் பெரியம்மை காய்ச்சல் தாக்குதலை எதிர்கொள்ள உலக தலைவர்கள் தயாராக வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி, பெருந்தொற்றை எதிர்கொள்ள உலக சுகாதார நிறுவனமானது பில்லியன் டொலர்கள் கட்டமைப்பு கொண்ட குழு ஒன்றையும் நிறுவ வேண்டும் என பில்கேட்ஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பான ஆய்வுகள், கண்டிப்பாக செலவு அதிகம் கொண்டதாக இருக்கும், ஆனால் அதிக பலனைத்தருவன என்றும் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா, அமெரிக்கா போன்ற நாடுகள் தாராளமாக செலவு செய்ய முன்வர வேண்டும் எனவும், இதனால் அடுத்த தொற்றுநோய்க்கு உலக நாடுகள் தயாராகிவிடும் என்றார்.
அடுத்த 5 ஆண்டுகளில், பெறுத்தொற்றை எதிர்கொள்ள நாம் தயாராகிவிட்டோம் என ஒரு புத்தகத்தை நான் எழுதலாம். ஆனால் அதை சாத்தியப்படுத்த, ஆய்வுகளுக்காக பிரித்தானியாவும் அமெரிக்காவும் கணக்கு பாராமல் செலவிட முன்வரவேண்டும் என்றார்.
உலக சுகாதார அமைப்பு முன்னெடுக்கும் அந்த முயற்சிக்கு ஆண்டுக்கு 1 பில்லியன் டொலர் தொகை தேவைப்படலாம். எதிர்காலத்தில் பயங்கரவாதிகள் உயிரியல் ஆயுதங்களை பயன்படுத்தும் சாத்தியங்கள் மிக மிக அதிகம் என்பதால், நாம் அதை முறியடிக்க இப்போதே தயாராக வேண்டும் என்றார்.
பரபரப்பான விமான நிலையங்களில் தீவிரவாதிகள் பெரியம்மை காய்ச்சலை பரப்பும் ஆபத்து இருக்கிறது என குறிப்பிட்டுள்ள பில் கேட்ஸ், அதற்கு அவர்கள் கண்டிப்பாக தாயாராகி வருவதாகவும், 10 விமான நிலையங்களில் ஒரே நேரத்தில் இவ்வாறான தாக்குதல் முன்னெடுக்கப்பட்டால், நமது திட்டம் என்னவாக இருக்கும் என்ற கேள்வியையும் அவர் முன்வைத்துள்ளார்.