வடகொரியாவில் உணவுப்பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு
06 Nov,2021
: ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சில் விதித்துள்ள பொருளாதார தடை மற்றும் கொரோனாவால் எல்லைகள் மூடப்பட்டதால் உணவுப்பொருட்கள் கொண்டு வருவதில் சிக்கல் போன்றவற்றால் வடகொரியாவில் உணவுப்பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களையும் கண்டுகொள்ளாமல் 2006ம் ஆண்டு முதல் வடகொரியா அணுகுண்டுகளை சோதித்து வருகிறது. அத்துடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் பரிசோதிக்கிறது. இதன் காரணமாக வடகொரியா மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதனால் அங்கு கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகிறது.
இதற்கு மத்தியில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. உணவுப்பொருட்கள் கொண்டு வருவது முடங்கியுள்ளது. இதனால் உணவுப்பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
இந்நிலையில் பொதுமக்கள் குறைவாக சாப்பிட வேண்டும் என்று கிம் ஜாங் உன் சமீபத்தில் தெரிவித்தது, மக்கள் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது. குளிர்காலம் வருகிற நிலையில் இப்போதே மக்கள் பட்டினி கிடப்பதாகவும், பட்டினிச்சாவுகள் நேரிடுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தெருக்களில் அனாதை குழந்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. பட்டினியால் இறப்பது போன்ற பிரச்சினைகள், அடித்தட்டு மக்களுக்கு உணவு பொருட்கள் பற்றாக்குறை எதிர்பார்த்ததை விட மோசமாக உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
வட கொரிய மக்கள் வரக்கூடிய வேளாண்அறுவடையை நம்பிக்கையுடன் எதிர்நோக்கி உள்ளனர். அறுவடை மூலம் கிடைக்கிற ஒவ்வொரு அரிசியையும் சோளத்தையும் பத்திரமாக சேகரிக்குமாறு வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார். இதற்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் வயல்களுக்கு அனுப்பப்படுகின்றனர். அறுவடையின்போது திருட்டு போனாலோ, ஏமாற்றினாலோ கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.