புவி வெப்பமயமாவதை தடுக்கும் வகையில், புவியின் வெப்ப நிலையை 1.5 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு குறைக்க 'ஜி - 20' மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது.
ஐரோப்பிய நாடான இத்தாலியின் ரோம் நகரில் 'ஜி - 20' நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற இரண்டு நாள் மாநாடு நேற்று முடிவுக்கு வந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உட்பட பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர்.
முயற்சி வேண்டும்
மாநாட்டில் எடுக்கப்பட்ட இறுதி முடிவுகள் குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:நிலக்கரி வாயிலாக மின்சாரம் தயாரிக்கும் திட்டங்களுக்கு சர்வதேச நாடுகள் நிதி அளிப்பதை இந்த ஆண்டு இறுதிக்குள் நிறுத்திக் கொள்ள அனைத்து நாடுகளும் உறுதி ஏற்க வேண்டும். அதே நேரத்தில் நிலக்கரி மின்சாரத்தின் உள்நாட்டு உற்பத்தியை நிறுத்த கெடு நிர்ணயிக்கப்படவில்லை.
'கார்ப-ன் - டை - ஆக்சைடு' எனப்படும், கரியமில வாயுவினால் ஏற்படும் காற்று மாசை இந்த நுாற்றாண்டின் மத்திக்குள் முற்றிலுமாக தடுக்கவும் முடிவெடுக்கப்பட்டு உள்ளது.கடந்த 2015ல் நடந்த பாரீஸ் ஒப்பந்தத்தில், புவியின் தட்பவெப்ப அளவை 2 டிகிரி செல்ஷியஸ் குறைக்க ஒப்பந்தம் கையெழுத்தானது. அதை 1.5 டிகிரி செல்ஷியஸ் அளவில் வைத்துக் கொள்ள அனைத்து நாடுகளும் முயற்சி எடுக்க வேண்டும்.
மேலும், பருவ நிலை மாற்றத்தினால் பாதிக்கப்படும் ஏழை நாடுகளுக்கு உதவ, ஆண்டுக்கு 7.50 லட்சம் கோடி ரூபாய் நிதியை பணக்கார நாடுகள் திரட்ட வேண்டும் என ஏற்கனவே எடுக்கப் பட்ட முடிவு இந்த கூட்டத்தில் மீண்டும் உறுதி செய்யப்பட்டது.இந்த இறுதி முடிவை நிறைவேற்ற தேவையான அனைத்து நடவடிக்கையும் முடுக்கிவிடுவதோடு, மாற்றத்துக்கு தங்களை தயார் செய்து கொள்வது, நிதி ஆதாரங்களை திரட்டுவது ஆகிய பணிகளை உடனடியாக மேற்கொள்ள அனைத்து நாட்டு தலைவர்களும் உறுதி அளித்துள்ளனர்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து இத்தாலி பிரதமர் மரியோ திராகி கூறியதாவது:பருவ நிலை மாற்றத்தை சீர்செய்ய நாம் நீண்ட நாள் இலக்கு நிர்ணயித்து இருந்தாலும் குறைந்த காலத்தில் இலக்கை அடைய நாம் முயற்சிக்க வேண்டும்.நிலக்கரி பயன்பாட்டை படிப்படியாக குறைத்து புதிப்பிக்கக் கூடிய எரிசக்தி உற்பத்தியில் நாம் அதிக முதலீடுகளை செய்ய வேண்டும். கிடைக்கக்கூடிய வளங்களை நாம் முறையாக பயன்படுத்துவதை உறுதிசெய்ய வேண்டும். புதிய உலகத்திற்கு ஏற்ப நம் தொழில்நுட்பங்களையும் வாழ்க்கை முறைகளையும், மாற்றியமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மதிப்பளிக்க வேண்டும்
சுற்றுச்சூழல் செயற்பாட்டாளரும், பிரிட்டன் இளவரசருமான சார்லஸ் கூறுகையில், ''காற்று மாசை குறைப்பது தொடர்பாக இளைய தலைமுறையினரின் கருத்துகளுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும்.''இதற்கான நிதி ஆதாரத்தை திரட்ட அரசு மற்றும் தனியார் இணைந்து செயல்படுவதே சிறந்த வழி,'' என்றார்.உள்நாட்டு நிலக்கரி மின்சார தயாரிப்பை நிறுத்த கெடு நிர்ணயிக்காதது பிரிட்டனுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளதாக, அந்நாட்டு பிரதிநிதி கருத்து தெரிவித்தார்.
'ஜி 20' மாநாடு முடிந்த பின், ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் பிரதமர் பெட்ரோ சான்செச்சை, பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். அப்போது, ஸ்பெயின் நிறுவனங்கள், இந்தியாவின் உள்கட்டமைப்பு பணிகளில் முதலீடு செய்யும்படி அழைப்பு விடுத்தார்.
நீரூற்றில் தலைவர்கள்!
'ஜி -- 20' மாநாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி, ஐரோப்பிய நாடான இத்தாலிக்கு சென்றுள்ளார். மாநாட்டின் இரண்டாம் நாளான நேற்று, பிரதமர் நரேந்திர மோடி உட்பட, 'ஜி - 20' நாடுகளின் தலைவர்கள் ரோமில் உள்ள வரலாற்று புகழ்பெற்ற நினைவுச்சின்னமான, 'ட்ரெவி' நீரூற்றை பார்வையிட்டனர். உலகின் பிரசித்தி பெற்ற இந்த நீரூற்று 26.3 மீட்டர் உயரமும், 49.15 மீட்டர் அகலமும் உடையது. இதை சுற்றிப் பார்த்த தலைவர்கள் நீரூற்றின் முன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த நிரூற்றை பார்வையிட வருவோர் அதில் நாணயங்களை வீசி எறிந்தால் அவர்கள் மீண்டும் ரோம் நகருக்கு வருகை தருவர் என நம்பப்படுகிறது. 'ஜி - 20' தலைவர்கள் அனைவரும் நீரூற்றில் நாணயங்களை வீசினர்.
பருவ நிலை மாநாடு துவங்கியது
''சி.ஓ.பி., 26' எனப்படும் பருவ நிலை மாற்றத்திற்கான ஐ.நா.,வின் 26வது மாநாடு, ஐரோப்பிய நாடான ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் துவங்கியது. இதில், பங்கேற்பதற்காக பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் கிளாஸ்கோ சென்றனர். துவக்க விழாவில் மாநாட்டின் தலைவர் அலோக் சர்மா பேசியதாவது:பருவ நிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளால் இந்த பூமி மிகப் பெரிய பேரழிவை சந்தித்து வருகிறது. வெள்ளம், புயல், காட்டுத் தீ, அதிக குளிர் மற்றும் வெயில் போன்ற இயற்கை சீற்றங்கள் வாயிலாக அதை நாம் உணர்ந்து வருகிறோம்.
கொரோனா பெருந்தொற்று பாதிப்பின் போது கூட பருவ நிலையில் மாற்றம் ஏற்படுவது தடைபடவில்லை. புவியின் தட்பவெப்பத்தை 1.5 டிகிரி செல்ஷியசாக பராமரிப்பது மட்டுமே இப்போதைக்கு நம் கையில் உள்ள கடைசி வாய்ப்பு. நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து துரிதமாக செயல்பட்டால் மட்டுமே இந்த புவியை காக்க முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.
இந்தியாவுக்கு வெற்றி
புவி வெப்பமடைவதை தடுக்கும் வகையில், ஜி - 20 தலைவர்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் முடிவுகள், இந்தியாவுக்கு கிடைத்துள்ள வெற்றியாக கருதப்படுகிறது.இது குறித்து சுற்றுச்சூழலியல் நிபுணர்கள் கூறியுள்ளதாவது:
புவி வெப்பமடைவதை தடுக்க, வளர்ந்த நாடுகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநாட்டில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 'நுகர்வு மற்றும் உற்பத்தியில் வளர்ந்த நாடுகள் நீடித்த நிலையான மற்றும் பொறுப்புதன்மையுடன் செயல்பட வேண்டும்' என, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். அது தீர்மானத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
மேலும் சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் உறுதிமொழியையும் இந்தியா வலியுறுத்தியது. இதுவும் தீர்மானத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.