லெபனானிலிருந்து இறக்குமதிக்கு சவுதி அரேபியா தடை: தூதர் வெளியேறவும் உத்தரவு
31 Oct,2021
ஏமனில் நடக்கும் உள்நாட்டு போர் குறித்து சவுதி அரேபியாவுக்கு எதிராக லெபனான் அமைச்சர் கருத்து தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சவுதி, லெபனான் தூதர் தங்கள் நாட்டில் இருந்து 48 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.
லெபனான் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் கோர்தாஹி அளித்த பேட்டி ஒன்றில், ஏமனில் சவுதி செய்யும் போர் அர்த்தமற்றது. அதை நிறுத்த வேண்டும். ஏமனில், ஈரான் ஆதரவுடன் செயல்படும் ஹூதி புரட்சியாளர்கள், தங்களை பாதுகாத்து கொள்வதற்காக, வெளிநாட்டு சக்திகளுக்கு எதிராக போரிட்டு வருகின்றனர் என தெரிவித்து இருந்தார்.
இதனால் அதிருப்தி அடைந்த சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சகம், லெபனான் நாட்டிற்கான தனது தூதரை திரும்ப அழைத்து கொண்டதுடன், அந்நாட்டில் இருந்து இறக்குமதிக்கு தடை விதித்துள்ளது. மேலும், தங்கள் நாட்டில் உள்ள லெபனான் தூதர் அடுத்த 48 மணிநேரத்தில் வெளியேற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. லெபனான் அமைச்சர், தங்களை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாலும், ஈரானின் ஆதரவாக உள்ள மற்றொரு அமைப்பான ஹெஸ்பொல்லாவிற்கு லெபனான் ஆதரவு தெரிவிப்பதாலும் இந்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளது.
இதற்கு வருத்தம் தெரிவித்துள்ள லெபனான் பிரதமர் நஜீப் மகாட்டி, சவுதி அரேபிய அரசு தனது முடிவினை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.