மோசமான வானிலை : 800க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்த அமெரிக்க ஏர்லைன்ஸ்
31 Oct,2021
அமெரிக்காவின் டல்லாஸ் பகுதியில் கடந்த வாரம் வீசிய புயல் காரணமாக, பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டதை அடுத்து, அமெரிக்க ஏர்லைன்ஸ் நிறுவனம் நூற்றுக்கணக்கான விமானங்களின் சேவையை ரத்து செய்தது.
புயலால் பணியாளர்கள் பணிக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்ட நிலையில், கடந்த வியாழக்கிழமை முதல் பணியாளர் பற்றாக்குறை நிலவுவதாக அந்நிறுவன தரப்பில் அறிக்கை அளிக்கப்பட்டு உள்ளது
அமெரிக்க ஏர்லைன்ஸ் கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் சுமார் 800 விமானங்களை ரத்து செய்ததாகவும், ஞாயிற்றுக்கிழமையன்று 400-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்தாக வாய்ப்புள்ளதாகவும் விமானங்களின் தாமதம், ரத்து செய்வதை கண்காணிக்கும் இணையதளமான பிளைட் அவேர் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நவம்பரில் விமான சேவை சீராகும் என அமெரிக்க ஏர்லைன்ஸ் நிர்வாக இயக்குனர் டேவிட் சேமோர் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் சவுத் வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனமும் சுமார் இரண்டாயிரம் விமானங்களை ரத்து செய்ததை அடுத்து, அந்நிறுவனம் 75 மில்லியன் டாலர் இழப்பை சந்தித்தது என்பது குறிப்பிடதக்கது