ஈரான் ராணுவம் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிப்பு
30 Oct,2021
அமெரிக்கக் கருவூலத்துறை ஈரான் ராணுவம் மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளதால் ஈரான் அதிருப்தியில் உள்ளது.
இதுகுறித்து அமெரிக்கக் கருவூலத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: சவூதி அரேபியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது கடந்த 2019ம் ஆண்டு ஆளில்லா விமானத் தாக்குதலை ஈரான் ராணுவம் நடத்தியது. 2021ம் ஆண்டு ஜூலை 29ம் தேதி ஓமன் கடற்கரையில் இஸ்ரேலுக்குச் சொந்தமான நிறுவனத்தால் இயக்கப்படும் மெர்சர் ஸ்ட்ரீட் வணிகக் கப்பலின் மீதும்ஈரான் ராணுவம் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியது.
ஈரானின் ட்ரோன்கள், ஹமாஸ், ஹவுத்தி போன்ற கிளர்ச்சியாளர்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. எனவே, ஈரான் ராணுவ ட்ரோன் பிரிவின் மீதும், ஈரான் ராணுவத்தின் புரட்சிகரப் பாதுகாப்புப் படைப் பிரிவின் தலைவர் அகாஜானி மீதும் புதிதாகப் பொருளாதாரத் தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் ஐரோப்பிய யூனியனுடனான அணு ஆயுத சோதனை தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ஈரான் சம்மதம் தெரிவித்துள்ளது. அணு ஆயுத சோதனை தொடர்பாக அமெரிக்காவுடன் ஈரான் மறைமுகமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் மீண்டும் ஈரான் மீது அமெரிக்காவால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
டெஹ்ரானுக்குத் தெற்கே போர்டோ என்ற இடத்தில் மலைக்கு அடியில் உள்ள ஆலையில் 2015-ல் நிறுத்தப்பட்ட யுரேனியம் செறிவூட்டும் பணியை ஈரான் தொடங்கியது. இதன் காரணமாக ஈரான் - அமெரிக்கா இடையே மோதல் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.