கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருவதாலும், உயிரிழப்புகள் கூடுவதாலும் ஒரு வாரம் சம்பளத்துடன் கூடிய விடுமுறையை புதின் அரசு அறிவித்துள்ளது.
கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. இப்போது மற்றொரு வல்லரசு நாடான ரஷியாவும் கொரோனாவின் ஆதிக்கத்துக்கு ஆளாகி உள்ளது. அதுவும் இங்கு கொரோனா வைரஸ் இறக்கை கட்டி பறக்கிறது என்று சொல்லத்தக்க விதத்தில் ஒவ்வொரு நாளும் 35 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிப்புக்கு ஆளாகின்றனர். ஆயிரத்துக்கு அதிகமானோர் இறக்கின்றனர்.
நேற்று முன்தினம் காலை நிலவரப்படி அங்கு 24 மணி நேரத்தில் 37 ஆயிரத்து 930 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளானார்கள். 1,069 பேர் இறந்துள்ளனர். நேற்று காலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 36 ஆயிரத்து 446 பேர் தொற்று பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். நேற்று முன்தினத்துடன் ஒப்பிடுகையில் பாதிப்பின் அளவு சற்று குறைந்தாலும் இறப்பை பொறுத்தமட்டில் நேற்று முன்தினத்தை விட நேற்று அதிகரித்துள்ளது. 1,106 பேர் இறந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருவதாலும், உயிரிழப்புகள் கூடுவதாலும் ஒரு வாரம் சம்பளத்துடன் கூடிய விடுமுறையை புதின் அரசு அறிவித்துள்ளது. வரும் 30-ந்தேதி தொடங்கி நவம்பர் மாதம் 7-ந்தேதி வரையில் அங்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
ஆனால் ஒவ்வொரு பிராந்தியமும் நிலைமைக்கேற்ப முன்கூட்டியே விடுமுறையைத் தொடங்கவும், முடியும் தேதியை நீட்டிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ்
மாஸ்கோவில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இரண்டாவது பெரிய நகரமான செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் 80 சதவீத மக்கள் தடுப்பூசி போடுகிற வரையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷியாவில்தான் உலகின் முதல் கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அங்கு மூன்றில் ஒருவர்தான் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தற்போதுதான் அங்கு தடுப்பூசி போடும் பணி வேகம் எடுத்துள்ளது. தினமும் 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் தினமும் 1.20 லட்சம் தடுப்பூசிதான் போடப்பட்டது.
செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் போலி தடுப்பூசி சான்றிதழ்கள் விற்கப்படுவதாக புகார் எழுந்து இருக்கிறது நேற்று முன்தினம் அங்கு நர்சுகளிடமும், டாக்டர்களிடமும் இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
இரவு 11 மணி முதல் காலை 7 மணி வரை ஓட்டல்களை மூடுமாறு உத்தரவிடுமாறு பிராந்திய தலைவர்களை அதிபர் புதின் அறிவுறுத்தி இருக்கிறார்.
மாஸ்கோ நகர மேயர் செர்கெய் சோபியானின், அங்கு 28-ந்தேதி முதல் நவம்பர் 7-ந்தேதி வரையில் பகுதி நேர ஊரடங்கு போட்டுள்ளார்.
30-ந்தேதி தொடங்கி ஒரு வார விடுமுறை காலத்தில் அதிபர் புதின் யாரையும் நேருக்கு நேர் சந்திக்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயினில் உயரும் கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்தது
ஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் குணமடைந்தோர் எண்ணிக்கை 48.50 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகின் 210-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பட்டியலில் ஸ்பெயின் 10-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், ஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 50 லட்சத்தைக் கடந்துள்ளது. அங்கு கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 87 ஆயிரத்தைக் கடந்துள்ளது. மேலும், 57 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.