சீனாவின் ஹைப்பர்சோனிக் ஆயுத சோதனை புதிய ஆயுதப் போட்டியின் தொடக்கமா?
25 Oct,2021
சீனா அணுஆயுத திறன் கொண்ட ஹைப்பர்சோனிக் ஏவுகணையை சோதித்த செய்தி ஒட்டுமொத்த ஆட்டத்தையே மாற்றக் கூடியது என சிலர் கூறுகிறார்கள்.இது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? இது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது? என பிரிட்டனில் உள்ள எக்ஸ்டர் பல்கலைக்கழகத்தின் ஸ்ட்ராட்டஜி அண்ட் செக்யூரிட்டி இன்ஸ்டிட்டியூட்டைச் சேர்ந்த ஜோனதன் மார்கஸ் விவரிக்கிறார். கோடை காலத்தில் இருமுறை, சீன ராணுவம் விண்ணில் ராக்கெட் ஏவியது, அது தன் இலக்கை தாக்குவதற்கு முன் பூமியை முழுமையாக சுற்றி வந்தது.
முதல் முயற்சியில் ஏவுகணை சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் இலக்கை தவறவிட்டது என விவரமறிந்தவர்கள் ஃபைனான்ஷியல் டைம்ஸ் பத்திரிகையிடம் கூறினர். சீனாவின் இந்த முன்னேற்றத்தைக் கண்டு சில அமெரிக்க அரசியல்வாதிகள் மற்றும் விமர்சகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அது மறு பயன்பாடு செய்யும் வகையிலான விண்கல சோதனை என சீனா அதை விரைவாக மறுத்தது.
இது நடந்ததை மறைக்க சீனா மேற்கொள்ளும் முயற்சி என்கிறார் கலிஃபோர்னியாவில் உள்ள மிடில்பரி இன்ஸ்டிட்டியூட் ஆஃப் இன்டர்னேஷனல் ஸ்டடீஸைச் சேர்ந்த கிழக்கு ஆசியா அணு ஆயுத பரவல் தடை திட்டத்தின் இயக்குனர் ஜெஃப்ரி லெவிஸ். காரணம் அதை அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.சீனா ஏவுகணையை (சுற்று வட்டப்பாதை குண்டுவீச்சு அமைப்பு) சோதித்தது எனக் கூறுவது தொழில்நுட்ப சாத்தியமுள்ளதும், சீனாவுக்கு போர்த் தந்திரக் காரணங்கள் உள்ளதும் என்று அவர் கூறுகிறார்.ஃபனான்ஷியல் டைம்ஸ் பத்திரிகை கூறுவது மற்றும் சீனா மறுப்பது இரண்டுமே சரியாக இருக்கலாம் என்கிறார் ஃப்லடெல்ஃபியாவைச் சேர்ந்த வெளி விவகார கொள்கை அமைப்பின், ஆய்வுப் பிரிவு இயக்குநர் ஆரோன் ஸ்டெயின்.
“மீண்டும் பயன்படுத்தப்படும் விண்கலன் என்பது ஒரு ஹப்பர்சோனிக் க்ளைடர் தான். அது வெறுமனே தரையிறங்கும். எஃப்.ஓ.பி.எஸ் ஏவுகணை கூட ஒருவகை க்ளைடரைப் பயன்படுத்திதான் ஏவப்படும். அதுவும் மீண்டும் பயன்படுத்தப்படும் விண்கலன் போலவே செயல்படும். எனவே இரு கருத்துகளுக்கும் இடையில் வேறுபாடு குறைவு,” என்பது அவரது கருத்து. இதெல்லாம் போக, கடந்த சில மாதங்களாக பல மூத்த அமெரிக்க அதிகாரிகள், சீனாவின் இந்த நடவடிக்கை பற்றி குறிப்பிட்டு வந்தனர். சரி இந்த எஃப்.ஓ.பி.எஸ் என்றால் என்ன? இதற்கும் ஐ.சி.பி.எம் என்கிற ஏவுகணை அமைப்புக்கும் ஏதாவது வித்தியாசம் உண்டா?