எல்லைப் பகுதிகளுக்கு புதிய சட்டத்தை நிறைவேற்றிய சீனா
24 Oct,2021
அருணாசல பிரதேசத்தை தங்கள் நாட்டின் ஒரு பகுதி எனக் கூறும் சீனா, லடாக் பகுதியிலும் தொடர்ந்து அத்துமீறி வருகிறது. சீனாவுக்கு பதிலடியாக இந்தியாவும் எல்லையில் ராணுவ பலத்தை அதிகரித்துள்ளது. இருநாடுகளுக்கும் இடையே எல்லையில் நீடிக்கும் பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வர இதுவரை 13 கட்ட பேச்சுவார்த்தை ராணுவ மட்டத்தில் நடத்தப்பட்டது.
எனினும், உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. எல்லையில் இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் நீடித்து வரும் நிலையில் எல்லை பகுதிகளுக்கான புதிய சட்டத்தை சீனா நிறைவேற்றியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் தேசிய சபையில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டம் அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வரும் என்று அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. சீனாவின் ‘இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு’ புனிதமானது மற்றும் மீற முடியாதது” என்னும் கருத்தை இந்த புதிய சட்டம் வலியுறுத்துகிறது.
புதிய சட்டத்தில், ”எல்லைப் பகுதிகளை பாதுகாப்பதற்காக சீன அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கும். எல்லைப் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும். எல்லைப் பகுதிகளில் சமூக மேம்பாடு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை வழங்கிட இந்த சட்டம் வழி செய்யும்அண்டை நாடுகளுடனான எல்லைப் பிரச்சினைகளில் சுமூக தீர்வு காண இந்த சட்டம் வழி செய்யும்” என்பன போன்ற அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
சீனா தனது அண்டை நாடுகளில் இந்தியா மற்றும் பூடானிடம் மட்டுமே எல்லை பிரச்சினையை தீர்க்காமல் உள்ளது. ஏனைய 12 அண்டை நாடுகளுடனான எல்லைப் பிரச்சினைகளுக்கு சீனா தீர்வு கண்டுள்ளது. இந்தியா சீனா இடையே உள்ள 3488 கி.மீ தூர எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் பிரச்சினை நிலவுகிறது. அதேபோல, பூடான்- சீனா இடையே 400 கி.மீ தூரம் உள்ள எல்லையில் பிரச்சினை நிலவுகிறது.
அக்டோபர் 14ம் தேதியன்று, எல்லைப் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தையை துரிதப்படுத்தும் விதமாக சீனா-பூடான் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.இது குறித்து சீனா தரப்பில் கூறுகையில், சீனா-பூடான் இடையே எல்லைப் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை துரிதப்படுத்தப்படும் என்றும், இவ்விரு நாடுகளுக்கும் இடையேஅரசியல் ரீதியான உறவு ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு லடாக்கில் இந்தியாவுடனான ராணுவ மோதல்களுக்கு இடையே சீனா, மேற்கண்ட ‘எல்லை நிலப்பகுதிக்கான புதிய சட்டத்தை’ உருவாக்கி அமல்படுத்த உள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது