பாகிஸ்தானை தொடர்ந்து கிரே பட்டியலில் துருக்கியும் சேர்ப்பு
23 Oct,2021
பண மோசடி மற்றும் பயங்கரவாத குழுக்களுக்கு நிதியுதவி அளிப்பதை தடுத்து, சர்வதேச நிதி அமைப்பிற்கான அச்சுறுத்தல்களை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காக எப்ஏடிஎப் எனப்படும் நிதி நடவடிக்கை பணிக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரீசை தலைமையிடமாக கொண்டு இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.
பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை இந்த அமைப்பு, கருப்பு பட்டியல் மற்றும் கிரே பட்டியல் என இரு வகைகளாக பிரிக்கிறது.
கருப்பு பட்டியலில் உள்ள நாடுகள், ஒத்துழைக்காதவை என வகைப்படுத்தப்பட்டு, அதனுடன், நிதி தொடர்பான எந்த பரிமாற்றத்தையும் உலக நாடுகள் வைத்துக்கொள்ளாது. கிரே பட்டியலில் உள்ள நாடுகள், எந்த நேரத்திலும், கருப்புப்பட்டியலில் சேர்க்கப்படலாம் என்ற எச்சரிக்கையுடன் வைக்கப்படுகின்றன.
இதற்கிடையே, பயங்கரவாத நிதி நடவடிக்கை பணிக்குழு (FATF)பாகிஸ்தானைத் தொடர்ந்து சாம்பல் பட்டியலில் தக்கவைத்துள்ளது. மேலும் அதன் நட்பு நாடான துருக்கியையும் தற்போது சாம்பல் பட்டியலில் சேர்த்து உள்ளது. இது பாகிஸ்தானுக்கு இரட்டை அடியாக உள்ளது.
இதற்குமுன், கருப்பு பட்டியலில் நுழைவதைத் தவிர்க்க துருக்கி ஆதரவை பாகிஸ்தான் பெற்று இருந்தது. மேலும், ஜோர்டான் மற்றும் மாலி ஆகியவையும் சாம்பல் பட்டியலில் சேர்க்கப்பட்டன.
இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பயங்கரவாத நிதி நடவடிக்கை பணிக்குழு தலைவர் மார்கஸ் பிளேயர் கூறியதாவது:
லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது, அல் கொய்தா மற்றும் தலிபான் போன்ற அமைப்பினருக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. இதனால் அந்நாட்டை தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம். பாகிஸ்தானைப் போல ஜோர்டான், மாலி மற்றும் துருக்கி ஆகிய நாடுகளும் சாம்பல் பட்டியலில் இருக்கிறது என குறிப்பிட்டார்.
மேலும், பாகிஸ்தானை சாம்பல் பட்டியலில் வைத்திருக்க இந்திய அழுத்தத்தின் கீழ் செயல்பட்டதாக கூறப்படுவதை எப்ஏடிஎப் மறுத்துள்ளது.