இந்திய எல்லையில் ஆக்கிரமிப்பு : சீனா மீது அமெரிக்கா கடும் தாக்கு
22 Oct,2021
'இந்தியா உட்பட பல நாடுகளின் எல்லையை ஆக்கிரமிக்க சீனா முயற்சிப்பதை அனுமதிக்க முடியாது' என, அமெரிக்கா தெரிவித்துள்ளது.
சீனாவிற்கான அமெரிக்க துாதராக முன்னாள் சார்பு செயலர் நிகோலஸ் பர்ன்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இப்பொறுப்பை ஏற்க, அமெரிக்க பார்லி.,யின் செனட் வெளியுறவு குழு முன், நிகோலஸ் பர்ன்ஸ் ஆஜரானார். அப்போது அவர் பேசியதாவது:இந்தியாவின் இமயமலை எல்லையை சீனா ஆக்கிரமிக்க முயற்சிக்கிறது. அதுபோல தென் சீனக் கடலில், வியட்னாம், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளின் கடல் எல்லைக்கு சீனா சொந்தம் கொண்டாடுகிறது. கிழக்கு சீனக் கடலில் ஜப்பான் அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதியை சீனா வளைக்கப் பார்க்கிறது. ஆஸ்திரேலியா, லிதுவேனியா ஆகிய நாடுகளை சீனா மிரட்டுகிறது.
இதுபோன்ற சர்வதேச விதிமுறைகளை மீறும் தவறுக்கு சீனாவை பொறுப்பேற்கச் செய்ய வேண்டும். பருவ நிலை மாற்றம், போதை பொருள் கடத்தல், சர்வதேச சுகாதாரம் போன்ற பிரச்னைகளில் சீனாவுக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும். அதேசமயம் நம் நாட்டின் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், புதிய தொழில்நுட்பங்கள் போன்றவற்றுக்கு எதிராக சீனா நடந்தால், அதை அமெரிக்கா கடுமையாக எதிர்க்கும்.
அதுமட்டுமின்றி, இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளின் பாதுகாப்புக்கு சீனா அச்சுறுத்தல் விடுத்தால், அதை அமெரிக்கா பொறுத்துக் கொள்ளாது.இவ்வாறு அவர் பேசினார். அமெரிக்க துாதராக சீனா செல்வதற்கு முன்னதாகவே, அந்நாட்டை கண்டித்து நிகோலஸ் பர்ன்ஸ் பேசியிருப்பது சர்வதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.