கனேடிய விமானங்களுக்கு தடை விதித்த ஹாங்காங் நாடு!
17 Oct,2021
கனடாவின் வான்கூவரில் இருந்து வரும் ஏர் கனடா விமானங்களுக்கு ஹாங்காங் இரண்டு வாரங்களுக்கு தடை விதித்துள்ளது. ஹாங்காங்கின் சுகாதாரத் துறை இது தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அக்டோபர் 13ல் வான்கூவரில் இருந்து ஹாங்காங்கிற்கு வந்த ஏர் கனடா விமானத்தில் இருந்த ஒரு பயணிக்கு வருகை சோதனை மூலம் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதோடு அந்த விமானத்தில் இருந்த மற்றொரு பயணி நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு விதிமுறைகளின் கீழ் இருக்கும் தேவைகளை பூர்த்தி செய்ய தவறிவிட்டார்.
இதன் விளைவாக, அக்டோபர் 16 முதல் 29 வரை ஏர் கனடாவால் இயக்கப்படும் வான்கூவரில் இருந்து வரும் பயணிகள் விமானங்களை தரையிறக்க ஹாங்காங்கின் சுகாதாரத் துறை தடை விதித்துள்ளது.
ஹாங்காங்கில் வெள்ளிக்கிழமை மட்டும் வேறுநாடுகளில் இருந்து வந்தவர்களில் 9 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் கனடா, இந்தியா, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பயணிகளும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது