சீன கம்யூனிஸத்துக்கு தைவான் ஜனநாயகம் என்றும் தலை வணங்காது:
10 Oct,2021
தைபே: தைவானின் வான் எல்லைக்குள் சீன போர் விமானங்கள் அத்துமீறியது தொடர்பாக அந்நாட்டு அதிபர் சாய் இங் வென் கருத்து தெரிவித்துள்ளார். சீன கம்யூனிஸ அரசின் ஆதிக்கத்தை தைவானின் ஜனநாயகம் கண்டிப்பாக வெற்றி கொள்ளும் என்றும் சீன கம்யூனிஸத்துக்கு தைவன் ஜனநாயகம் என்றும் தலை வணங்காது என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
கடந்த பல ஆண்டுகளாக தைவான் நாட்டை சீனா தனது தேசிய பாதுகாப்புச் சட்டம் மூலமாக கையகப்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து முன்னதாக சீன அதிபர் ஜி ஜிங் பிங் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
தைவானை சீனா வசமாக்குவோம் என்று அவர் உறுதிபட தெரிவித்து இருந்தார். அவரது இந்த அறிக்கையை நிரூபிக்கும் வகையில் அவ்வப்போது சீன விமானப்படை தைவான் வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தது.
அவ்வப்போது சீன கடற்படை தைவான் கடற்படையுடன் மோதல் போக்கில் ஈடுபட்டு வருவது வாடிக்கையாகிவிட்டது. இவ்வாறாக சீன கம்யூனிச அரசு தொடர்ந்து தைவானுக்கு பலவித அச்சுறுத்தல்களை அளித்த வண்ணமே இருந்தது.
இதற்கு தற்போது தைவான் அதிபர் சாய் இங் வென் பதில் அளித்துள்ளார். சீன கம்யூனிச அடக்குமுறைக்கு தைவான் ஜனநாயக அரசு என்றும் தலைவணங்காது என்று அவர் உறுதிபடத் தெரிவித்தார். மேலும் எதிர்காலத்தில் சீன அரசின் இந்த அத்துமீறல்களுக்கு அஞ்சாமல் பதிலடி கொடுக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
ஜனநாயக நாடான தைவான் சீனாவின் இரும்புப்பிடியில் இருந்து தன்னை தற்காத்து கொள்ள அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளின் உதவியை நாடிவருகிறது. கடந்த ஆண்டு அமெரிக்காவுக்கும் தைவானுக்கும் இடையே ஆயுத ஒப்பந்தம் இடப்பட்டது.
தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் தைவான் சுதந்திரமாக வர்த்தகம் செய்து சீனாவை சாராமல் தனித்து செயல்பட விரும்பும் நிலையில் சீனா தொடர்ந்து எல்லை அத்துமீறலில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.