உலகின் முன் மாதிரி நகரமாக துபாய்க்கு ஐ.நாவின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
                  
                     24 Sep,2021
                  
                  
                     
					  
                     
						
	 
	 
	உலகின் முன் மாதிரி நகரமாக துபாய் நகருக்கு ஐ.நாவின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதற்காக உழைத்த அரசுத்துறை தலைவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சியானது துபாய் உலக வர்த்தக மையத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு நேற்று பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் ஹம்தான் பின் முகமம்து பின் ராஷித் அல் மக்தூம் நேரில் கலந்துகொண்டார்.
	 
	 
	பின்னர் அவர் கூறியதாவது:-
	அமீரக துணை அதிபரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் வழிகாட்டுதலில் எதிர்கால நிலைத்தன்மை வாய்ந்த நகரமாக துபாய் நகரம் மாற்றமடைந்துள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு திறனாளர்கள் ஒத்துழைப்புடன் உலகத்தரம் வாய்ந்த திட்டங்கள் துபாயில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
	 
	இதனை ஐ.நா வின் பேரிடர் அபாய கட்டுப்பாடு அலுவலகம் சார்பில் முன்மாதிரி நகரமாக துபாய் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. துபாய் நகரின் சிறந்த நடைமுறைகள் மற்றும் பேரிடர் காலத்தில் அபாயங்களை குறைக்கும் நடவடிக்கைகள் ஆகியவைகள் இதில் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக புதுமையான அணுகுமுறைகளை துபாய் ஏற்றுக்கொண்டு செயல்படுவது குறித்தும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
	 
	பட்டத்து இளவரசர் பாராட்டு
	துபாய் நகரம் நெகிழ்வுத்தன்மையில் உலகிலேயே முதல் இடத்தில் உள்ளது. உலக அளவில் 4 ஆயிரத்து 357 நகரங்கள் இந்த ஐ.நாவின் ஆய்வு மற்றும் கணக்கெடுப்பில் பங்கேற்றன. இதில் தேர்வு செய்யப்பட்ட 56 நகரங்களில் பேரிடர் காலத்தில் திறமையான செயல்பாடுடைய, ஸ்மார்ட் மற்றும் நிலைத்தன்மை வாய்ந்த முன்மாதிரி நகரமாக அங்கீகரித்துள்ளது. துபாயை உலக அளவில் ஐ.நாவின் முன்மாதிரியான நகரமாக அங்கீகாரம் அளிக்க உதவிய அரசுத்துறை தலைவர்கள், உயர் அதிகாரிகளுக்கு பாராட்டுகள்.
	 
	இவ்வாறு அவர் கூறினார்.
	 
	இந்த நிகழ்ச்சியில் துணை ஆட்சியாளர் மேதகு ஷேக் மக்தூம் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம், துபாய் போலீஸ், சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம், மின்சாரம் மற்றும் தண்ணீர் ஆணையம், சிவில் ஆணைய போக்குவரத்து ஆணையம் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்