காபூல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட முதல் சர்வதேச விமானம்
10 Sep,2021
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலிபான் பயங்கரவாதிகள் கடந்த மாதம் 15-ம் தேதி ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானையும் கைப்பற்றினர். இதனால் அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பி ஓடினார்.
இதையடுத்து ஆட்சி அதிகாரம் தங்கள் வசமானதாக அறிவித்த தலிபான்கள், விரைவில் புதிய அரசு அமையும் என தெரிவித்தனர்.
இந்தப் புதிய அரசில் தலிபான் பயங்கரவாத அமைப்பை நிறுவியவர்களில் ஒருவரும், அந்த அமைப்பின் தற்போதைய தலைவருமான முல்லா அப்துல் கனி பரதருக்கு அதிபர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கப் படை பின்வாங்கப்பட்டதை அடுத்து காபூல் விமான நிலையத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த அமெரிக்க ராணுவம் முழுவதும் ஆகஸ்ட் 30-ம் தேதி இரவு நாடு திரும்பியது.
இதையடுத்து, தலிபான்களின் கட்டுப்பாட்டிற்குள் காபூல் விமான நிலையம் வந்தது. அதன்பின், கத்தார் அரசின் உதவியுடன் விமானங்களை இயக்கும் பணிகளை தலிபான் அரசு முடுக்கிவிட்டது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து கத்தாருக்கு முதல் சர்வதேச விமானம் கிளம்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விமானத்தில் அமெரிக்கர்கள் உள்பட 200 பேர் பயணம் செய்தனர்.
சர்வதேச விமான சேவை தொடங்கப்பட்ட நிலையில், எதிர்வரும் நாட்களில் ஆப்கானிஸ்தானில் சிக்கியிருக்கும் தங்கள் நாட்டு மக்களை சர்வதேச நாடுகள் மீட்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :