நடுவானில் விமானம் பறந்தபோது மாரடைப்பு ஏற்பட்ட விமானி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
31 Aug,2021
கொரோனா கட்டுப்பாடு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட விமான சேவையை வங்காளதேச விமான நிறுவனம் சமீபத்தில்தான் தொடங்கியது.
வங்காளதேசத்தின் பிமன் பங்களாதேஷ் விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று ஓமனின் மஸ்கட்டில் இருந்து கடந்த 27-ந் தேதி காலை டாக்காவுக்கு சென்று கொண்டிருந்தது.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் அருகே பறந்து கொண்டிருந்தபோது அந்த விமானத்தின் விமானிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அருகே உள்ள மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதிக்கப்பட்டதை அடுத்து அங்கு விமானத்தை துணை விமானி அவசரமாக தரையிறக்கினார். அதன்பின் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட விமானி நவுசாத் அதுல் (49), அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில், அவரது நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வந்ததால், நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.