ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்களில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனி வகுப்புகள் - தாலிபான்கள் கட்டுப்பாடு
30 Aug,2021
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள நிலையில், பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் மற்றும் மாணவியர் தனித்தனி வகுப்பறைகளில் படிக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
தாலிபான்களின் அடக்குமுறையால் ஆப்கானிஸ்தானில் இருந்து அந்நாட்டு மக்களும், அங்கு வசிக்கும் வெளிநாட்டினரும் வெளியேறி வருகின்றனர். இதனால் காபூல் விமான நிலையத்துக்கு மக்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
வரும் 31ம் தேதி ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறும் என்பதால், புதிய அமைச்சரவையை உருவாக்கும் முயற்சியில் தாலிபான்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சுகாதாரம், கல்வி, பொருளாதாரம் உள்ளிட்ட முக்கிய துறைகளை நிர்வகிக்கும் அதிகாரிகள் ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் முதல் அதிரடியாக, பல்கலைக்கழகங்களில் இருபாலரும் ஒன்றாக படிக்க தாலிபான்கள் தடை விதித்துள்ளனர். இஸ்லாமிய சட்டப்படி மாணவர்கள் மற்றும் மாணவியருக்கு தனித்தனி வகுப்பறைகளில் பாடம் நடத்தப்படும் என, கல்வித்துறையை கவனித்து வரும் சியார் கான் யாத் தெரிவித்துள்ளார்.
இதேபோல் கந்தஹாரில், தொலைக்காட்சி மற்றும் வானொலிகளில் இசை நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்துள்ள தாலிபான்கள், பெண்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கும் தடை விதித்திருக்கின்றனர். ஆரம்ப காலத்தில் இருந்தே பாடகர்கள் மற்றும் ஓவியர்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் தாலிபான்கள், அந்தாரப் மாகாணத்தை சேர்ந்த நாட்டுப்புற பாடகர் ஃபாவத் அந்தாரபியை சுட்டுக் கொலை செய்தனர்.
இந்நிலையில் கடந்த 26ம் தேதி காபூல் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில், 2 தடகள வீரர்களும், 2 செய்தியாளர்களும் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.