கொரோனா பலி அதிகரிப்பு: அமெரிக்காவில் புளோரிடா ஆஸ்பத்திரி பிணவறைகளில் இடம் இல்லை
29 Aug,2021
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் மீண்டும் தீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக புளோரிடா மாகாணம், பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. அங்கு தினசரி பாதிப்பு, ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகளின் சேர்க்கை, இறப்புகள் என எல்லாமே அதிகரித்து வருகின்றன.
கடந்த வாரத்தில் தினமும் சராசரியாக 280 பேர் அங்கு கொரோனாவால் பலியாகி உள்ளனர். கடந்த மாதத்தில் தினசரி 52 பேர் இறந்த நிலையில் இப்போது இறப்பு 6 மடங்காக அதிகரித்துள்ளது. அங்கு ஆஸ்பத்திரிகளில் பிணவறைகளில் இடம் இல்லாமல் நிரம்பி வழிவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
குறிப்பாக ஆரஞ்ச், ஆஸ்சியோலா, போல்க், செமினால், வாலுசியா போன்ற நகரங்களில் பிணவறைகள் முழு கொள்ளளவையும் அடைந்து விட்டன. உடல்களைப் பெற்று இறுதிச்சடங்கு நடத்துகிற நிறுவனங்களும் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களால் நிரம்பி வழிகின்றன. அவை உடல்களை வைப்பதற்காக பெரிய லாரிகளை வாடகைக்கு அமர்த்தி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. கொரோனா தொற்றின் கோரத்தாண்டவம், புளோரிடா மாகாண மக்களை துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.