தைவான் ஜலசந்தியில் அமெரிக்க போர்க்கப்பல்கள்: சீனா கடும் கண்டனம்
29 Aug,2021
1949-ல் நடந்த உள்நாட்டு போரின்போது சீனாவும் தைவானும் பிரிந்தன. ஆனால், தைவான் தனது நாட்டின் ஒரு பகுதி என சீனா தொடா்ந்து கூறி வருகிறது. அதுமட்டுமின்றி, அவசியம் ஏற்பட்டால் தைவானை கைப்பற்ற படை பலத்தை பயன்படுத்தவும் தயங்க மாட்டோம் என சீனா மிரட்டி வருகிறது.
இதனால் தைவான் ஜலசந்தி வழியாக சர்வதேச கப்பல்கள் செல்வதை சீனா தொடர்ந்து எதிர்த்து வருகிறது. ஆனால் தைவான் விவகாரத்தில் சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள அமெரிக்கா அவ்வப்போது தைவான் ஜலசந்தி வழியாக தனது போர்க் கப்பல்களை இயக்கி சீனாவை எச்சரித்து வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்காவின் 2 போர்க் கப்பல்கள் நேற்று முன்தினம் தைவான் ஜலசந்தி வழியாக சென்றன. இது தொடர்பாக அமெரிக்காவுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சீன ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "தைவான் ஜலசந்தியில் அமெரிக்காவின் போர்க் கப்பல்கள் நுழைந்ததற்கு நாங்கள் உறுதியான எதிர்ப்பையும் கடுமையான கண்டனத்தையும் தெரிவிக்கிறோம். அமெரிக்காவின் இந்த நடவடிக்கை ஆத்திரமூட்டும் மற்றும் தைவான் ஜலசந்தியின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை அச்சுறுத்தக் கூடியது ஆகும். தைவான் சீனாவின் பிரிக்க முடியாத பகுதி. அதன் உள்விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடுவதை சீனா பொறுத்துக் கொள்ளாது" எனக் கூறப்பட்டுள்ளது.