தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் உள்ள காபூல் விமான நிலையத்திற்கு வெளியே நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதலில் அமெரிக்க ராணுவத்தினர் உட்பட 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு, ஐ.எஸ்.ஐ.எஸ்.கே., என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பு குறித்த பல தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.
ஐ.எஸ்.ஐ.எஸ்.கே.,
ஈரானின் கோராசான் மாகாணத்தைச் சேர்ந்த இந்த ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு, ஐ.எஸ்., அமைப்பின் கிளை அமைப்பாக செயல்படுகிறது. கடந்த, 2015ல் துவங்கப்பட்ட இந்த அமைப்பு அடுத்த சில ஆண்டுகளில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் சிறுபான்மை குழுக்கள், பத்திரிகையாளர்கள், பாதுகாப்புப் படைகள், பொது இடங்கள், கல்வி நிறுவனங்கள், அரசு அமைப்புகள் உள்ளிட்டவற்றை குறிவைத்து பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது.
அமைப்பின் பின்னணி
பாகிஸ்தான் தலிபான் அமைப்பு, ஆப்கன் தலிபான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஐ.எஸ்., அமைப்பு உள்ளிட்டவற்றின் முன்னாள் உறுப்பினர்கள் சேர்ந்து இந்த ஐ.எஸ்.ஐ.எஸ்.கே., அமைப்பை துவங்கி உள்ளனர். இதன் உறுப்பினர்கள் ஈராக் மற்றும் சிரியாவில் இயங்கும் ஐ.எஸ்., அமைப்பிடம் இருந்து நிதியுதவி பெறுவதுடன் பயிற்சிகளையும் பெற்றுள்ளனர்.
அமைப்பின் குறிக்கோள்
மத்திய மற்றும் தெற்காசியாவில் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பை கட்டமைக்க வேண்டும் என்பதே இந்த அமைப்பின் பிரதான குறிக்கோளாக உள்ளது.இந்த நாடுகளில் குழப்பத்தை ஏற்படுத்தி ஆளும் அரசு மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்படுத்துவதே இந்த அமைப்பின் லட்சியம்.மிகப்பெரிய தாக்குதல்களை நடத்தி அதன் வாயிலாக, தங்கள் அமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்பதே இந்த அமைப்பின் தற்போதைய இலக்காக உள்ளது. இதன் வாயிலாக பிராந்தியத்தில் ஒரு மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்கலாம் என அவர்கள் கருதுகின்றனர்.
தலிபானுடன் உள்ள தொடர்பு
தலிபான் அமைப்பினரை தங்களுக்கான போட்டியாளராகஐ. எஸ்.ஐ.எஸ்.கே., அமைப்பு பார்க்கிறது. இந்த அமைப்பினர், தலிபான் ஆக்கிரமித்துள்ள பகுதிகளையும் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் தலிபான் அமைப்பினருக்கும், இந்த அமைப்புக்கும் இடையே தொடர்ந்து பனிப்போர் நிலவி வருகிறது.
அச்சுறுத்தல்கள்
காபூல் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் வாயிலாக இந்த அமைப்பு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி, தலிபான் அமைப்பினரால் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என்பதை வெளிப்படுத்தும் முயற்சிகளில் இந்த அமைப்பு தொடர்ந்து ஈடுபடும் என கூறப்படுகிறது.
பாக்.,கை பின்பற்றும் தலிபான்
ஆப்கானிஸ்தானின் தற்காலிக அதிபர் என கூறிவருபவரும், முன்னாள் துணை அதிபருமான அம்ருல்லா சாலே நேற்று கூறியதாவது:'ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை' என, தலிபான் அமைப்பினர் தெரிவித்துள்ளது வேடிக்கையாக உள்ளது.
பாகிஸ்தானின் பலுாசிஸ்தானில் குவேட்டா ஷூரா பயங்கரவாத அமைப்பு உருவானது. எனினும், 'அந்த அமைப்புக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை' என, பாக்., அப்போது கூறியது. அதேபோல் தலிபான் அமைப்பும் தற்போது கூறி உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்