ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை மீட்கும் பணி இன்றோடு நிறுத்தம் - பிரான்ஸ் அறிவிப்பு
27 Aug,2021
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதாக அறிவித்ததில் இருந்து, அங்கு தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்தது. அந்நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறிய நிலையில், தலைநகர் காபூல் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் தலீபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சி அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் தலீபான்களின் ஆட்சிக்கு பயந்து ஆப்கானிஸ்தான் மக்கள் பலர் அந்த நாட்டில் இருந்து தப்பிச் செல்ல முயன்று வருகின்றனர். இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாட்டு அரசுகள், விமானம் மூலமாக தங்கள் நாட்டு மக்களையும், தகுதி உள்ள ஆப்கான் மக்களையும் பத்திரமாக மீட்டு வருகின்றனர்.
மேலும் வரும் 31 ஆம் தேதியோடு ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை மீட்கும் பணி நிறுத்தப்படும் என்று அமெரிக்கா ஏற்கனவே அறிவித்துள்ளது. அந்த தேதிக்குப் பிறகு வெளிநாட்டுப் படைகள் ஆப்கானிஸ்தானில் இருக்கவும், மக்களை வெளியேற்றவும் அனுமதிக்க முடியாது என்று தலீபான் தரப்பிலும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து தங்கள் நாட்டு மக்களையும், தகுதியுள்ள ஆப்கான் மக்களையும் பத்திரமாக மீட்கும் பணி ஆகஸ்ட் 27 (இன்று) மாலை நிறுத்தப்படும் என்று பிரான்ஸ் அறிவித்துள்ளது. இதுகுறித்து பிரான்ஸ் பிரதமா் ஜீன் காஸ்டெக்ஸ் அளித்த பேட்டியில், “வெள்ளிக்கிழமைக்குப் பிறகு காபூல் விமான நிலையத்திலிருந்து மக்களை வெளியேற்றும் பணியை எங்களால் தொடர இயலாது” என்று தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் அரசு கடந்த வாரம் முதல் ஆப்கானிஸ்தானில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சுமார் 100 பேரும், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரம் பேரும் பிரான்ஸ் விமானப்படையால் ஆப்கானிஸ்தானில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.