செப்டம்பர் 1-ந் தேதி முதல் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 18 நாடுகளில் இருந்து ஓமன்
24 Aug,2021
இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 18 நாடுகளில் இருந்து ஓமன் நாட்டிற்கு வருவதற்கான பயணத்தடை விலக்கிக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஓமன் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
பல்வேறு நாடுகளில் ஏற்பட்ட கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக அந்த நாடுகளின் மீது பயணத்தடை விதிக்கப்பட்டது. குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகள் சிவப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டு இருந்தது.
இதன் காரணமாக அந்த நாடுகளில் இருந்து ஓமன் நாட்டிற்கு பயணிகள் வருகை புரிய தடை விதிக்கப்பட்டது. இந்தநிலையில், கடந்த 19-ந் தேதி சுப்ரீம் கமிட்டி, சுகாதாரத்துறை, ஓமன் போலீஸ், சிவில் விமான போக்குவரத்து ஆணையம் உள்ளிட்ட அரசுத்துறைகளுடன் ஆலோசனை நடத்தியது. இதில், தடை செய்யப்பட்ட நாடுகளில் இருந்து மீண்டும் பயணிகள் விமான சேவையை தொடங்க அனுமதி வழங்கப்பட்டது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து தற்போது அனைத்து விமான நிறுவனங்களுக்கும், சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் சார்பில் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில், தற்போது விதிக்கப்பட்டுள்ள இந்தியா உள்ளிட்ட 18 நாடுகளில் இருந்து ஓமன் நாட்டிற்கு வருவதற்கான பயண தடை விலக்கி கொள்ளப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
அதன்படி, செப்டம்பர் 1-ந் தேதி முதல் ஓமன் நாட்டிற்கு, குடியுரிமை பெற்றவர்கள், ஓமன் குடியிருப்பு விசா பெற்றவர்கள் எந்த விதமான தடையுமின்றி வருகை புரியலாம் என அறிவிக்கப்படுகிறது. அதுதவிர வருகை விசாவில் வருவதற்கு தகுதியானவர்களும் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஓமனுக்கு வருகை புரிவோர் கட்டாயம் தங்களுக்கு செய்யப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகளை க்யூ.ஆர் கோட் உடன் கூடிய சான்றிதழை எடுத்து வர வேண்டும். அதேபோல ஒரு டோஸ் அல்லது இரண்டு டோஸ் ஓமன் நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளை போட்டு இருக்க வேண்டும். இதில் அந்த டோஸ் தடுப்பூசியை போட்டுக்கொண்டு 14 நாட்கள் நிறைவடைந்து இருக்க வேண்டும். இந்த விதிமுறைகள் அனைத்தும் செப்டம்பர் 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.