ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருந்த அமெரிக்கப்படைகள் வெளியேறியதை தொடர்ந்து, தலிபான்கள் அந்த நாட்டு அரசை கைப்பற்றி உள்ளன.
புதிய அதிபர் மற்றும் புதிய அரசை அமைப்பது தொடர்பாக தலிபான் தலைவர்கள் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளனர்.
புதிய அரசின் கட்டமைப்பு குறித்து விரைவில் அறிவிப்பதாகவும், அது ஷரியத் சட்டப்படி நடத்தப்படும் எனவும் தலிபான்கள் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் 1919-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றதன் நினைவாக 102-வது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி ஆப்கானிஸ்தானை இஸ்லாமிய அமீரகமாக (இஸ்லாமிக் எமிரேட் ஆப் ஆப்கானிஸ்தான்) தலிபான்கள் பிரகடனம் செய்தனர். இதை தலிபான் செய்தி தொடர்பாளர் சபியுல்லா முகைது தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு உள்ளார்.
ஆப்கானிஸ்தானில் சுமார் 20 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் ஆட்சியை பிடித்திருக்கும் தலிபான்களால் நாடு முழுவதும் பெரும் பதற்றம் நீடித்து வருகிறது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினாலும், அங்கு ஆட்சியை நடத்துவது அவ்வளவு எளிதாக இருக்காது என அரசியல் நிபுணர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக கடுமையான பண தட்டுப்பாடு, அதிகார வர்க்கத்தின் பற்றாக்குறை மற்றும் ஆயுதக்குழு ஒன்றின் எழுச்சி அச்சுறுத்தல் போன்றவை தலிபான்களுக்கு மிகுந்த சவாலாக இருக்கும் என கருதப்படுகிறது.
நாடு முழுவதும் பெரும்பாலான ஏ.டி.எம்.கள் பணமின்றி வறண்டுள்ளன. இறக்குமதியையே சார்ந்திருக்கும் ஆப்கானில் உணவு தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வு போன்றவற்றால் சுமார் 3.8 கோடி மக்கள் பெரும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இதன் மூலம் அங்கு ஏற்கனவே இருந்த அரசுகள் எதிர்கொண்ட அதே சவால்களை தலிபான்களும் எதிர்கொள்ள நேரிட்டு உள்ளது.
ஆப்கானிஸ்தானை இஸ்லாமிய அமீரகமாக தலிபான்கள் பிரகடனம்
அது மட்டுமின்றி கடந்த 2001-ம் ஆண்டு அமெரிக்கப்படைகள் நுழைந்தபோது அவர்களுடன் இணைந்து போரிட்ட வடக்கு கூட்டணி மீண்டும் உயிர்பெறத் தொடங்கி இருக்கிறது. தலிபான்கள் வசமாகாத ஒரே மாகாணமான வடக்குப்பகுதியில் உள்ள பன்சிர் பள்ளத்தாக்கு பகுதியில் இவர்கள் தங்கள் ஆயுத குழுக்களை பலப்படுத்தி வருகின்றனர். இதுவும் தலிபான்களுக்கு தலைவலியை கொடுக்கலாம் என கருதப்படுகிறது.
இந்த காரணங்களால் ஆப்கானிஸ்தான் மக்கள் பெரும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டு உள்ளதாக ஆப்கானிஸ்தானில் உள்ள உலக உணவு திட்ட தலைவர் மேரி எல்லன் மெக்ரோவர்த்தி கவலை வெளியிட்டு உள்ளார். நம்ப முடியாத விகிதத்தில் ஒரு மனிதாபிமான நெருக்கடி நம் கண்களுக்கு முன்னால் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
உணவு இறக்குமதி செய்வதற்கு கடும் சிரமங்கள் இருப்பது மட்டுமின்றி, நாட்டில் நிலவி வரும் வறட்சி, 40 சதவீதத்துக்கும் அதிகமான பயிர்களை நாசப்படுத்தி விட்டது எனக்கூறியுள்ள அவர், இந்த நெருக்கடியில் சிக்கியிருக்கும் ஆப்கானிஸ்தான் மக்களுடன் சர்வதேச சமூகம் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
இது ஒருபுறம் இருக்க, தலிபான்களுக்கு எதிராக நாடு முழுவதும் ஆங்காங்கே மோதல்கள் தொடங்கி விட்டன. குறிப்பாக ஜலாலாபாத் நகரில் தலிபான்களின் கொடியை இறக்கி விட்டு ஆப்கானிஸ்தான் தேசியக்கொடியை போராட்டக்காரர்கள் ஏற்றினர். அங்கு நடந்த வன்முறையில் ஒருவர் கொல்லப்பட்டார்.
இதைப்போல கோஸ்ட் மாகாணத்தில் வன்முறை சம்பவங்கள் மூண்டதை தொடர்ந்து மாகாணம் முழுவதும் 24 மணி நேர ஊரடங்கை தலிபான்கள் அமல்படுத்தி உள்ளனர்.
இதற்கிடையே பாகிஸ்தானுடனான வர்த்தகத்தை தலிபான்கள் தொடங்கி விட்டனர். அந்த நாட்டுடனான இரண்டு முக்கிய எல்லைப்பகுதிகளான டோர்காம், சாமன் ஆகிய வழிகள் திறக்கப்பட்டு உள்ளதால், பாகிஸ்தானில் இருந்து நூற்றுக்கணக்கான லாரிகள் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்தன.
பாகிஸ்தானில் இருந்து உலோக கழிவுகளுடன் சென்ற லாரிகளுக்கு தலா 2,400 டாலர் வீதம் தலிபான்கள் கட்டணம் வசூலித்து வருவதாக ஆப்கானிஸ்தான் ஸ்டீல் உற்பத்தி தொழிற்சாலை சங்க தலைவர் அப்துல் நரிர் கூறினார். ஆனால் உள்நாட்டில் ஸ்டீல் உற்பத்தியை பெருக்குவதற்காக முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி, இத்தகைய உலோக கழிவுகள் இறக்குமதியை தடை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது