கார்கள், ஹெலிகாப்டர் முழுக்க பணத்துடன் ஆப்கனை விட்டு தப்பியோடிய அதிபர் அஷ்ரப் கனி -
17 Aug,2021
நான்கு கார்களில் பணம் நிறைந்திருந்தன, ஹெலிகாப்டரில் பணத்தை நிரப்ப முயன்றனர், ஆனால் எல்லா பணத்தையும் அதில் நிரப்ப முடியவில்லை. கொஞ்சம் பணம் ஓடுபாதையில் விடப்பட்டது
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலை தலிபான்கள் நேற்று (ஆக.15) கைப்பற்றிய பின்னர் அதிபர் அஷ்ரப் கானி தலைமையிலான அரசு தானாகவே கலைந்தது. தலிபான்கள் பிடியில் சிக்காமலிருக்க அதிபர் அஷ்ரப் கானி ராணுவ விமானத்தில் தஜிகிஸ்தான் நாட்டுக்கு அரசு அதிகாரிகளுடன் தப்பிச் சென்றார். அவர் ஆப்கனை விட்டு கிளம்பிய போது கார்கள், ஹெலிகாப்டர் முழுக்க பணத்தை நிரப்பிச் சென்றார் எனவும் அவரை தஜிகிஸ்தான் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் தற்போது தெரியவந்திருக்கிறது.
தலிபான்கள் கையில் சிக்காமல் இருப்பதற்காக காபுல் விமான நிலையத்தில் இருந்து ராணுவ விமானத்தில் ஏறி தஜிகிஸ்தான் நாட்டுக்கு அதிபராக இருந்த அஷ்ரப் கானி தப்பிச் சென்றார். எனினும் அவருடைய விமானத்தை தஜிகிஸ்தானின் Dushanbe விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து அவர் ஓமன் நாட்டில் தற்போது தரையிறங்கி இருக்கிறார். அவருடன் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹம்துல்லா மொஹிப் உள்ளிட்டோர் இருக்கின்றனர். ஓமனிலிருந்து அமெரிக்காவுக்கு அவர் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இதனிடையே ஆப்கானிஸ்தானில் இருந்து அஷ்ரப் கானி விமானத்தில் புறப்பட்ட போது 4 கார்களும், ஒரு ஹெலிகாப்டர் முழுக்க பணத்தை நிரப்பிக் கொண்டு சென்றதாகவும் ரஷ்ய தூதரக செய்தித்தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.
அஷ்ரப் கானி ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பி ஓடிய விதம் குறித்து பேசிய ரஷ்ய தூதரக செய்தித்தொடர்பாளரான நிகிடா இஷென்கோ, “நான்கு கார்களில் பணம் நிறைந்திருந்தன, ஹெலிகாப்டரில் பணத்தை நிரப்ப முயன்றனர், ஆனால் எல்லா பணத்தையும் அதில் நிரப்ப முடியவில்லை. கொஞ்சம் பணம் ஓடுபாதையில் விடப்பட்டது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஆப்கனில் இருந்து புறப்பட்ட அஷ்ரப் கானி, சமூக வளைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மக்கள் ரத்தம் சிந்துவதை தவிர்க்கவே நாட்டைவிட்டு வெளியேறியதாக குறிப்பிட்டுள்ளார். இனி நாட்டின் மரியாதைக்குக்கும், பாதுகாப்புக்கும் தலிபான்களே பொறுப்பாவார்கள் எனவும் தெரிவித்துள்ளார். இதனிடையே, அஷ்ரப் கனி உள்ளிட்டோர் நாட்டை விட்டு வெளியேறியதை தொடர்ந்து, போர் முடிவுக்கு வந்ததாகவும், பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் எனவும், தாலிபான்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.