ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தலிபான்கள் நேற்று அதிரடியாக கைப்பற்றினர். ஆப்கன் முழுமையாக தலிபான்கள் வசம் வந்துள்ளதை அடுத்து, நிபந்தனை இன்றி சரண் அடைந்து, அமைதியான முறையில் ஆட்சி அதிகாரத்தை ஒப்படைக்கும்படி, அந்த நாட்டு அரசுக்கு தலிபான்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி, காபூலில் இருந்து வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தாக்குதல்அமெரிக்க இரட்டை கோபுரத்தின் மீது 2001ல், அல் - குவைதா பயங்கரவாதிகள் விமானங்களை மோதி பயங்கர தாக்குதல் நடத்தினர். தாக்குதலுக்கு காரணமான அல் - குவைதா தலைவர் ஒசாமா பின் லேடனை பிடிக்க, ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் முகாமிட்டன. அப்போது முதல் ஆப்கன் படைகளுக்கும், தலிபான்களுக்கும் இடையே நடந்து வரும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டுவர, ஆப்கன் படைகளுக்கு அமெரிக்கா பயிற்சி அளித்து வந்தது.
கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடந்த சமரச பேச்சை அடுத்து போரை முடித்துக் கொள்ள தலிபான்களும், ஆப்கன் படைகளும் சம்மதித்தன. இதையடுத்து ஆப்கனில் முகாமிட்டுள்ள அமெரிக்க படைகள் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டன. இந்த நேரத்தில் தலிபான்கள் மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தினர். மிக குறுகிய காலத்தில் ஆப்கானிஸ்தானின் பல்வேறு மாகாணங்களையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.இந்நிலையில் தலைநகர் காபூலை தலிபான்கள் நேற்று அதிரடியாக கைப்பற்றினர். அதிபர் மாளிகையும் தலிபான்கள் வசம் வந்தது.தலைநகரில் உள்ள அரசு அலுவலகங்களின் முக்கிய ஆவணங்களை, அரசு ஊழியர்கள் தீயிட்டு எரித்து விட்டு, அங்கிருந்து தப்பினர்.
இதனால் நகர் முழுதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.''ஆப்கன் அரசு நிபந்தனை இன்றி சரணடைந்து, ஆட்சி அதிகாரத்தை அமைதியான முறையில் ஒப்படைக்க வேண்டும்,'' என, தலிபான் செய்தி தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் தெரிவித்தார்.ஆட்சி அதிகாரத்தை ஒப்படைப்பது குறித்து பேச்சு நடத்த, தலிபான் தரப்பினர் அதிபர் மாளிகைக்கு விரைந்துள்ளதாக செய்தி வெளியானது.இந்நிலையில் ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி, காபூலில் இருந்து வெளியேறியதாகவும், தலிபான்கள் தரப்பில், இடைக்கால அதிபராக அலி அகமது ஜலாலி நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.அச்சுறுத்தல்'அதிபர் அஷ்ரப் கனி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹம்துல்லாவுடன் நாட்டில் இருந்து வெளியேறினார்' என, அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆப்கனில் தலிபான்கள் ஆட்சி அமைக்கஉள்ள நிலையில் நாட்டில் மீண்டும் பழமைவாதம் தலை துாக்கும் என அஞ்சும் மக்கள், வெளிநாடுகளில் தஞ்சம் கேட்க துவங்கியுள்ளனர். வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் ஆப்கனை விட்டு கூட்டம் கூட்டமாக வெளியேறத் துவங்கியுள்ளனர்.ஆப்கன் துாதரகத்தில் பணியாற்றும் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள், பணியாளர்களை அழைத்து வர, 'ஏர் - இந்தியா' விமானம் நேற்று ஆப்கன் சென்றது. அங்கிருந்து 129 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு நேற்று இரவு டில்லி வந்தது.'ஆட்சி மாற்றத்தினால் பொது மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் அச்சுறுத்தல் ஏற்படாது' என, தலிபான்கள் உறுதி அளித்துள்ளனர்.
அரசு படைகளுக்கு ஆதரவாக செயல்பட்டவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனாலும் ஆப்கனை விட்டு வெளியேறுவதற்காக காபூல் விமான நிலையத்தில் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.காபூலில் பணியாற்றும் தங்கள் நாட்டு துாதரக அதிகாரிகளை பத்திரமாக அழைத்துச் செல்வதற்காக அமெரிக்கா ஏராளமான ராணுவ வீரர்களை நேற்று அனுப்பி வைத்தது. விமானம் மற்றும் ஹெலிகாப்டர்கள் வாயிலாக அமெரிக்க துாதரக அதிகாரி கள் வெளியேறினர்.
இதேபோல் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த துாதரக அதிகாரிகள், அந்தந்த நாடுகள் சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட விமானங்கள் வாயிலாக வேகமாக வெளியேறி வருகின்றனர். இதற்கிடையே காபூலில் இருந்து இயக்கப்படும் விமான சேவை முற்றிலும் ரத்து செய்யப்படவுள்ளதாக தலிபான்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கனில் பதற்றம் நிலவுவதை அடுத்து, அதன் அண்டை நாடான பாகிஸ்தான் எல்லைகளை மூடியுள்ளது.
ஆப்கனில் நடக்கும் நிகழ்வுகளை கூர்ந்து கவனித்து வருவதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. எல்லைகளை கைப்பற்றியது!ஆப்கானிஸ்தான் எல்லை முழுதும் தலிபான்கள் வசம் வந்தன. இது குறித்து, பாக்., வெளியுறவுத்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது கூறுகையில், ''ஆப்கன் - பாக்., எல்லையில் உள்ள டோர்காம் பகுதியை தலிபான்கள் கைப்பற்றினர். இதையடுத்து, இரு நாடுகளுக்கு இடையிலான எல்லை போக்குவரத்தை பாக்., நிறுத்தியுள்ளது,'' என்றார்.