அமெரிக்காவில் ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழிகின்றன: நாள்தோறும் 1 லட்சம் பேர் பாதிப்பு
10 Aug,2021
கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில், உலக அளவில் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறது. அங்கு கொரோனா தடுப்பூசி அதிக வேகத்தில் போடப்பட்டது. 18 வயதுக்கு மேற்பட்டோரில் சுமார் 70 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
அப்படி இருந்தும் சமீபநாட்களாக அமெரிக்காவில் கொரோனா மீண்டும் கோர தாண்டவம் ஆடி வருகிறது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 1 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதனால், மீண்டும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.
இதற்கு உருமாறிய கொரோனா வகையை சேர்ந்த டெல்டா வைரஸ்தான் என்று கருதப்படுகிறது. ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையும் மளமளனெ அதிகரித்து வருகிறது. அதனால், ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழிகின்றன.
கடந்த மாதத்தில் நாள் ஒன்றுக்கு 12 ஆயிரம் பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியில் சேர்ந்து வருகிறார்கள்.
புளோரிடா ஆஸ்பத்திரி சங்கத்தின் தலைமை செயல் அதிகாரி மேரி மேஹியு கூறுகையில், ‘‘தடுப்பூசி போடாதவர்களை டெல்டா வைரஸ் வேகமாக தாக்கி வருகிறது. ஜாக்சன்வில்லே, ஆர்லாண்டோ ஆகிய நகரங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளில் கடந்த வாரம் நோயாளிகள் வருகை உச்சத்தை தொட்டது’’ என்றார்.
டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்பத்திரிகளில் ஒரே நாளில் 5 ஆயிரம் பேர் அனுமதிக்கப்பட்டனர். ஹூஸ்டன் நகர ஆஸ்பத்திரிகளின் அவசரகால அறைகளில் படுக்கை இருப்பை தாண்டி நோயாளிகள் குவிந்து விட்டனர். ஒரு ஆஸ்பத்திரியில் நடைபாதையிலும், காத்திருப்பு அறையிலும் வைத்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
நோய் பாதிப்பு குறைவாக இருந்தால், காத்திருப்பு அறையில்தான் இடம் கிடைக்கும் என்று ஒரு அதிகாரி தெரிவித்தார். இதுபோல், குழந்தைகள் ஆஸ்பத்திரிகளிலும் படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
தடுப்பூசி போட்டவர்களுடன் ஒப்பிடுகையில், தடுப்பூசி போடாதவர்களுக்கு தொற்று பாதிக்க 19 மடங்கு வாய்ப்பு அதிகம் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. எனவே, ஆரோக்கியமானவர்கள், இளைஞர்கள் போன்ற ஆபத்து இல்லாத நபர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அவர்கள் மறைமுகமாக மற்றவர்களுக்கு தொற்றை பரப்ப வாய்ப்புள்ளது என்றும் அமெரிக்க தொற்று நோயியல் நிறுவனத்தின் இயக்குனர் அந்தோணி பவுசி கேட்டுக்கொண்டுள்ளார்