6-வது நாளாக பற்றி எரியும் காட்டுத் தீ- திணரும் தீயணைப்பு வீரர்கள்
08 Aug,2021
க்ரீஸ் நாட்டில் 6வது நாளாக பற்றி எரிந்த காட்டுத்தீயால், எவியா தீவுப்பகுதியில் பல ஏக்கர் மரங்கள் எரிந்து சேதம் அடைந்தன. அண்டை நாடுகளின் உதவியுடன், காட்டுத்தீயை அணைக்கும் பணியில் க்ரீஸ் தீயணைப்பு வீரர்கள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
க்ரீஸில் வழக்கத்தை விட இந்தாண்டு கோடை வெயிலின் தாக்கம் உக்கிரம் அடைந்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 45 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகி உள்ளது. 2வது பெரிய தீவு நகரமான எவியாவில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பார்க்கும் இடமெல்லாம் பற்றி எரிவதால் மக்கள் செய்வதறியாது திகைக்கின்றனர்.
6வது நாளாக எவியா நகரில் காட்டுத்தீயின் தாக்கம் குறையாததால் ஏராளமான மரங்கள், வனப்பகுதியை ஒட்டியுள்ள வீடுகள் தீக்கிரையாயின. இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
காட்டுத்தீயால் எவியா தீவு, புகை மண்டலமாக காட்சியளிப்பதால் அங்கு ஹெலிகாப்டர்கள் மூலம் தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தீயணைக்கும் பணியில் குரோஷியா, ருமேனியா, இஸ்ரேல், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளும் க்ரீஸூக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளன.
இந்நிலையில் க்ரீஸின் முக்கிய பகுதிகளில், திங்களன்று 41 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.