பில் கேட்ஸ் - மெலிண்டா சட்டப்படி பிரிந்தனர்
04 Aug,2021
அமெரிக்காவைச் சேர்ந்த 'மைக்ரோசாப்ட்' நிறுவனர் பில்கேட்ஸ் - மெலிண்டா தம்பதி சட்டப்படிவிவாகரத்து பெற்று பிரிந்தனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த கம்ப்யூட்டர் மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோசாப்ட்டின் நிறுவனர் பில்கேட்ஸ், 65. இவரது மனைவி மெலிண்டா, 56. கடந்த 27 ஆண்டுகளாக கணவன் - மனைவியாக வாழ்ந்த இவர்கள், மே மாதம் விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டனர். 90 நாட்கள் காத்திருப்பு காலத்திற்குப் பின் வாஷிங்டன் மாகாண கிங் நகர நீதிமன்றம் இவர்களுக்கு சட்டப்படி விவகாரத்து வழங்கியது.
வாஷிங்டன் சட்டப்படி தம்பதியின் சொத்துக்கள் விவாகரத்திற்குப் பின் சரிசமமாக இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். தங்கள் விருப்பப்படி சொத்துக்களை பிரித்துக் கொள்வதாக தம்பதியர் தெரிவித்தால் அதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளும். பில்கேட்சும், மெலிண்டாவும் தங்களுக்குள் சொத்துக்களை பிரித்துக் கொள்வதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். அதனால் சொத்து பிரிப்பு விபரம் தெரியவில்லை.
விவாகரத்து அறிவிப்பின் போது பில்கேட்சின் சொத்து மதிப்பு 10 லட்சத்து 95 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. இதில் 22 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகள் மெலிண்டா பெயருக்கு மாற்றப்பட்டன. விவாகரத்து பெற்றாலும், பில் - மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையில் ஒன்றாக செயல்பட உள்ளதாக இருவரும் தெரிவித்துள்ளனர்