இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றால் 3 ஆண்டுகள் பயணத் தடை: சவுதி
28 Jul,2021
ரியாத்: இந்தியா உள்ளிட்ட சிகப்பு பட்டியலில் உள்ள நாடுகளுக்கு சவுதி அரேபியர்கள் சென்று திரும்பினால் 3 ஆண்டுகள் பயண தடை விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கோவிட் வைரஸின் புதிய வகைகளை தடுக்கும் விதமாக இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
இது குறித்து அந்நாட்டு உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது: 2020 மார்ச் மாதத்திற்கு பிறகு கடந்த மே மாதம் தான் சவுதி குடிமக்கள் அனுமதியின்றி வெளிநாடு செல்ல அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் சிலர் விதிகளை மீறினர். தற்போது உருமாறிய வைரஸ் வகை அச்சுறுத்தலாக இருப்பதால் அரசின் சிகப்பு பட்டியலில் உள்ள நாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. நேரடியாகவும், வேறு நாட்டிற்கு சென்று அங்கு செல்வதும் கூடாது. அப்படி பயணித்து திரும்பினால் சட்ட நடவடிக்கை மற்றும் கடுமையான அபாரதம் விதிக்கப்படும். மேலும் 3 ஆண்டுகள் வெளிநாடுகளுக்கு பயணிக்க தடை விதிக்கப்படும், என கூறினர்.
சவுதி தற்போது அர்ஜென்டினா, பிரேசில், எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, இந்தோனேசியா, லெபனான், பாகிஸ்தான், தென்ஆப்ரிக்கா, துருக்கி, வியட்நாம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட பல நாடுகளுக்கு பயணம் செய்ய தடை விதித்துள்ளது. சுமார் 3 கோடி மக்கள் தொகை கொண்ட சவுதியில் 2020-ல் தினசரி 4 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்பட்டது. ஜனவரியில் அது நூறாக குறைந்தது. தற்போது இரண்டாம் அலையில் மீண்டும் ஆயிரங்களில் பதிவாகிறது. செவ்வாயன்று 1,379 பேரிடம் கோவிட் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.