இவரையா சந்தித்தார்? முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப்புக்கு பாகிஸ்தானில் கடும் எதிர்ப்பு
25 Jul,2021
வெளியுறவுத்துறை அமைச்சர் உட்பட இம்ரான் கான் கட்சியைச் சேர்ந்த பெரும்பாலான அமைச்சர்கள், நவாஸ் ஷெரிஃபுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்து பேசியதற்காக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃபுக்கு பாகிஸ்தானில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
பாகிஸ்தானில் நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் என்ற பெருமையை சுமப்பவர் நவாஸ் ஷெரிஃப் (வயது 71). பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தில் சிக்கி 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் பிரதமர் பதவியை இழந்த நவாஸ் ஷெரிஃப், கடந்த 2019ம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் மருத்துவ சிகிச்சைக்காக தங்கி இருக்கிறார். அவர் லண்டனில் தங்கியிருந்து சிகிச்சை பெற லாகூர் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. ஆனால் அவர் சிகிச்சை முடிந்து
இதனிடையே இவர் சமீபத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசரான ஹம்துல்லா மொஹிப்பை லண்டனில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். ஆப்கன் தேசிய பாதுகாப்பு கவுன்சில் தங்களின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில், பாதுகாப்பு ஆலோசகர் மொஹிப், ஆப்கன் அமைச்சர் சாயித் சதத் நாதெரி ஆகியோர், லண்டனில் நவாஸ் ஷெரிஃபை சந்தித்து பேசிய போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர்.
ஆப்கன் பாதுகாப்பு ஆலோசகரான மொஹிப், பாகிஸ்தானை ‘விபச்சார விடுதி’ என வர்ணித்து பேசியது பாகிஸ்தானில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் தான் நவாஸ் செரிஃப் அவரை சந்தித்து பேசியிருக்கிறார் என்பதால் தற்போது பாகிஸ்தானில் நவாஸ் ஷெரிஃபுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
வெளியுறவுத்துறை அமைச்சர் உட்பட இம்ரான் கான் கட்சியைச் சேர்ந்த பெரும்பாலான அமைச்சர்கள், நவாஸ் ஷெரிஃபுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
தகவல் தொழில்நுட்ப அமைச்சரான ஃபவத் சவுத்ரி, பாகிஸ்தானின் ஒவ்வொரு எதிரியும் நவாஸ் ஷெரிஃபுக்கு நண்பர் என காட்டமாக தெரிவித்தார்.
எனினும் தனது தந்தை நவாஸ் ஷெரிஃபுக்கு ஆதரவாக பேசியிருக்கும் அவரின் மகளான மர்யம் நவாஸ், தனது தந்தை நல்லென்ன அடிப்படையிலேயே இந்த சந்திப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், அண்டை நாட்டினருடன் நட்புறவை பேணவே இச்சந்திப்பில் அவர் கலந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.