தலீபான் பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா வான்வழி தாக்குதலை மீண்டும் தொடங்கிய
24 Jul,2021
கிட்டத்தட்ட 95 சதவீத அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி விட்ட நிலையில், ஆகஸ்ட் 31-ந் தேதிக்குள் மொத்தமாக வெளியேறிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே அமெரிக்கப் படைகளின் வெளியேற்றம் காரணமாக ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் ஆதிக்கம் பெருகி வருகிறது.நாட்டின் பல்வேறு மாவட்டங்களையும் அண்டை நாடுகளுடனான முக்கிய எல்லைப் பகுதிகளையும் தலீபான் பயங்கரவாதிகள் கைப்பற்றி வருகின்றனர். அவர்களை சமாளிக்க முடியாமல் ஆப்கானிஸ்தான் ராணுவம் திணறி வருகிறது.இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் ராணுவத்துக்கு
ஆதரவாக தலீபான் பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா வான்வழி தாக்குதலை நடத்த தொடங்கியுள்ளது.
இதுகுறித்து பென்டகன் செய்தி தொடர்பாளர் ஜான் கெர்பி கூறுகையில், ‘‘அமெரிக்க ராணுவத்தின் மத்திய பிரிவு தளபதியான கென்னட் மெக்கென்சியின் அனுமதியின் பேரில் கடந்த சில நாள்களாக, ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்பு படைக்கு ஆதரவாக விமான படை மூலம் தாக்குதல் நடத்தினோம். ஆப்கானிஸ்தான் படைகளுக்கு ஆதரவாக தொடர்ந்து வான்வழி தாக்குதலை நடத்திவருகிறோம்’’ என்றார்.வான்வழி தாக்குதலின் மற்ற விவரங்களை பகிர்ந்து கொள்ள மறுத்த ஜான் கெர்பி, ஆப்கானிஸ்தான் படைகளுக்கும் அந்த நாட்டு அரசுக்கும் உதவுவதில் உறுதி பூண்டுள்ளோம் என தெரிவித்தார்