துபாய் விமானங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதால் பரபரப்பு!
23 Jul,2021
உலகில் நாள் முழுவதும் பரபரப்பாக இயங்கி வரும் விமான நிலையங்களில் துபாய் சர்வதேச விமான நிலையமும் ஒன்றாகும். பல்வேறு நாடுகளில் கொரோனாவால் முடங்கி கிடந்த விமான சேவைகள், தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதால் துபாய் விமான நிலையத்தில் விமான சேவையானது தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. துபாய் விமான நிலையத்தில், டாக்சி வே மற்றும் ரன் வே ஆகிய பெயர்களில் பாதைகள் உள்ளது. டாக்சி வே எனப்படுவது முனையத்தில் நின்று கொண்டு இருக்கும் விமானம் ரன் வே எனப்படும் ஓடுபாதைக்கு செல்லும் வழியாகும்.இதில் நேற்று டாக்சி வே பாதையில் கிர்ஜிஸ்தான் நாட்டின் மனாஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு செல்வதற்காக எப்.இசட் 1461 என்ற பிளை துபாய் விமானம் தயாராகி கொண்டு இருந்தது. இந்த விமானம் நவீன போயிங் 737- 800 ரகத்தை சேர்ந்ததாகும். அதேநேரத்தில் கல்ப் ஏர் நிறுவனத்தின் விமானம் பக்ரைன் நாட்டின் தலைநகர் மனாமாவுக்கு புறப்பட டாக்சி வே யில் சென்று கொண்டு இருந்தது.
விமானங்கள் மோதின
அப்போது இந்த 2 விமானங்களும் எதிர்பாராத விதமாக மோதிக்கொண்டன. அருகருகே சென்றபோது இருவிமானங்களின் வால் பகுதியானது மோதியது. இதனால் விமானத்திற்குள் சிறு அதிர்வு ஏற்பட்டது. இதன் காரணமாக உள்ளே இருந்த பயணிகள் பதற்றமடைந்தனர்.உடனடியாக அந்த விமானிகள் தரைக்கட்டுப்பாட்டு அறைக்கு அளித்த தகவலின் பெயரில் மீண்டும் அந்த விமானங்கள் முனையத்திற்கு வரவழைக்கப்பட்டது. பயணிகளும் உடனடியாக விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டனர். இந்த சம்பவம் காரணமாக அந்த ஓடுபாதை தற்காலிகமாக மூடப்பட்டது. 2 மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பியதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பயணிகளுக்கு பாதிப்பு இல்லை
பிளை துபாய் நிறுவனம் சார்பில், இந்த சம்பவத்துக்கு பயணிகளிடம் வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், வேறு விமானம் மூலம் பயணிகள் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கல்ப் ஏர் விமான நிறுவனம், மாற்று விமானம் ஏற்பாடு செய்து பயணிகளை பத்திரமாக அனுப்பி வைத்தது.
இந்த விபத்து காரணமாக விமான சேவை எதுவும் பாதிக்கப்படவில்லை என்றும், பயணிகள் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும் சர்வதேச விமான நிலையம் அறிவித்துள்ளது. மேலும் விபத்து தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.