பெகாசஸ் என்ற ஸ்பைவேர் மூலம் உலகம் முழுக்க பலர் வேவு பார்க்கப்பட்டதில் இரண்டு துபாய் இளவரசிகளின் செல்பேசி எண்கள் இருந்தது தெரிய வந்துள்ளது.
துபாய் ஆட்சியாளரின் மகளான இளவரசி லத்தீஃபா மற்றும் அவரது முன்னாள் மனைவியான இளவரசி ஹயா பின்ட் அல்-ஹுசைன் ஆகியோரது செல்பேசிகள் வேவு பார்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தாம் பிணைக்கைதியாக அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் இளவரசி லத்தீஃபா பேசும் வீடியோவை கடந்த பிப்ரவரி மாதம் பிபிசி பனோராமா வெளியிட்டது.
இந்நிலையில் இளவரசி ஹயா கடந்த 2019ஆம் ஆண்டு தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக துபாயில் இருந்து தப்பி வெளியேறினார். இந்த இருவரின் குற்றச்சாட்டுகளை ஐக்கிய அரபு அமீரக அரசு மறுத்துவிட்டது.
ஓர் இஸ்ரேலிய நிறுவனத்தால் அரசாங்கங்களுக்கு விற்கப்பட்ட செல்ஃபோன் ஸ்பைவேரால் உலகம் முழுக்க உள்ள பல செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள் இலக்கு வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இளவரசி லத்தீஃபா: மாயமாகிப் போன துபாய் ஆட்சியாளரின் மகள்
ஆடம்பர வாழ்க்கையை விட்டு சென்று பிரிட்டனில் மறைந்திருக்கும் துபாய் இளவரசி
அப்படி கண்காணிக்கப்படுவதாகக் கூறப்படும் தரவு தளத்திலிருந்து கசிந்த 50,000 எண்களில் இந்த இரு இளசரசிகளின் எண்களும் இருந்ததாக தெரிகிறது.
பெகாசஸ் எனப்படும் ரகசிய மென்பொருள், இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஒ எனும் இணையப் பாதுகாப்பு (சைபர் செக்யூரிட்டி) நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. வங்கதேசம், மெக்சிகோ, சௌதி அரேபியா போன்ற பல நாடுகள், என்எஸ்ஒ நிறுவனத்திடம் இருந்து பெகாசஸ் மென்பொருளை வாங்கிப் பயன்படுத்துகின்றன.
இளவரசி ஹயா
இந்த வேவு பார்க்கும் மென்பொருளை அரசுகள் பயன்படுத்துவது குறித்துப் பல முறை கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அத்துடன் ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் என்எஸ்ஒ நிறுவனத்துக்கு எதிராக வழக்கும் தொடர்ந்துள்ளன.
யார் இந்த லத்தீஃபா?
துபாய் ஆட்சியாளரான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூமின் 25 குழந்தைகளில் ஒருவர் லத்தீஃபா. சேக் மக்தூம் துபாயை ஒரு மினுமினுப்பு மிகுந்த நகரமாகவும், வணிகத்தில் ஈடுபட விரும்புபவர்கள் வந்து குவியும் இடமாகவும், அப்பிராந்தியத்தில் இருப்பவர்கள் விளையாட விரும்பும் இடமாகவும் மாற்றியிருந்தார்.
ஆனால் ஐக்கிய அரபு அமீரகத்தின் பெண்களுக்கு சட்டங்கள் மற்றும் பழக்கங்கள் அவர்கள் வாழ்க்கையை மிகவும் கட்டுப் படுத்தும் விதத்தில் இருந்தன.
பெகாசஸ் ஸ்பைவேர் என்றால் என்ன? வேவு பார்க்க இது பயன்படுத்தப்படுவது ஏன்?
பெகாசஸ் ஸ்பைவேர்: இந்திய ஜனநாயகத்தை ஆட்டம் காண வைக்கும் உளவுப் பிரச்னையா?
துபாயில் இருந்து தப்பிக்கும் முயற்சியை லத்தீஃபா முன்னெடுத்தபோது, அவர் பிடிபட்டு அடைத்துவைக்கப்பட்டார்.
“நான் வாகனம் ஓட்ட அனுமதிக்கப் படுவதில்லை. துபாயில் பயணிக்கவோ, துபாயை விட்டு வெளியேறவோ, எனக்கு அனுமதி இல்லை,” என்று அவர் தப்பிக்கும் முன்பு பதிவு செய்த காணொளி ஒன்றில் கூறியுள்ளார் லத்தீஃபா.
“2000மாவது ஆண்டு முதல் நான் நாட்டை விட்டு வெளியே செல்லவில்லை. நான் வெளியே சென்று பயணிக்க வேண்டும், படிக்க வேண்டும், ஏதாவது இயல்பானவற்றைச் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கேட்டு வருகிறேன் ஆனால் அவர்கள் என்னை விடவில்லை. நான் இங்கிருந்து செல்ல வேண்டும்,” என்று அந்தக் காணொளியில் அவர் கூறியுள்ளார்.
இளவரசி லத்தீஃபா
இளவரசி லத்தீஃபாவுக்கு கடவுச்சீட்டு கிடையாது. அதுமட்டுமல்லாமல் அவர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தார். அதன் காரணமாக அவர் துபாயில் இருந்து நழுவி வெளியேறி ஓமன் கடற்கரையோரம் வரவேண்டியிருந்தது.
ஒரு பாழடைந்த சிறு படகில் அவர்கள் சர்வதேச கடல் எல்லைக்கு வர பல மணி நேரங்கள் ஆகின. அன்று மாலை அவர்களை சுதந்திரத்திற்கு அழைத்துச்செல்ல இருந்த படகை அவர்கள் சென்றடைந்தனர்.
தனது நண்பர் ஒருவருக்கு அனுப்பிய வாட்ஸ்அப் செய்தியில் “நான் இப்போது சுதந்திரமாக இருக்கிறேன்,” என்று லத்தீஃபா அறிவித்தார்.
இந்தியப் பெருங்கடலைக் கடந்து சென்று அதன் பின்பு அமெரிக்காவுக்கு விமானம் மூலம் செல்ல வேண்டும் என்பது அவர்களது திட்டம். அங்கு அரசியல் தஞ்சம் கோரலாம் என்று லத்தீஃபா எண்ணியிருந்தார்.
ஆனால் 8 நாட்கள் கழித்து அவர்கள் இந்திய கரையோரம் நெருங்கியபோது அவரது தப்பும் முயற்சி மிகவும் மோசமாகிப்போனது.
இளவரசி ஹயா யார்?
ஷேக் முகமது அல் மக்தூம் உடன் இளவரசி ஹயா
துபாயிலுள்ள தனது கணவரை விட்டு சென்ற இளவரசி ஹயா லண்டனில் தலைமறைவாக வாழ்ந்து வருகிறார்.
துபாயை ஆளும் ஷேக் முகமது அல் மக்தூமின் மனைவியான இளவரசி ஹயா பின்ட் அல்-ஹூசைன், லண்டனில் தலைமறைவாக வாழ்ந்து வருவதாகவும், தனது கணவரை விட்டு பிரிந்து சென்ற பின்னர் உயிருக்கு பயந்து வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது,
தனது முன்னாள் கணவர் மீது கடத்தல், துன்புறுத்தல் போன்ற பல குற்றச்சாட்டுகளை முன்வைத்த இளவரசி ஹயா, கடந்த 2019ஆண்டு ஏப்ரல் மாதம் தனது இரண்டு குழந்தைகளோடு பிரிட்டனுக்கு தப்பிச் சென்றார். அவரது குற்றச்சாட்டுகளை பிரிட்டன் நீதிமன்றம் பதிவு செய்திருக்கிறது.
ஜோர்டானில் பிறந்து, பிரிட்டனில் கல்வி பயின்ற 45 வயதான இளவரசி ஹயா, கோடால்பின் குதிரை பந்தய திடலின் உரிமையாளரான ஷேக் முகமது அல் மக்தூமை 2004ம் ஆண்டு திருமணம் செய்து, அவரது ஆறாவது மற்றும் கடைசி மனைவியுமாக மாறினார்.