சர்வதேச கடல் எல்லையில் மேலும் இரு போர்க்கப்பல்கள்: பிரித்தானியாவின் அதிரடி
22 Jul,2021
ஆசிய-பசுபிக் சர்வதேச கடல் எல்லை பகுதியில் இரண்டு போர்க்கப்பல்களை நிரந்தரமாக நிறுத்தப்படும் என பிரித்தானியா அறிவித்துள்ளது. பிரித்தானியாவின் மிகப்பெரிய போர் கப்பலான குயின் எலிசபெத் செப்டம்பர் மாதம் ஜப்பான் செல்கிறது. இதனைத் தொடர்ந்து இருநாடுகளும் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட இருக்கிறது.
ஜப்பான் செல்லும் குயின் எலிசபெத் போர்க்கப்பலைத் தொடர்ந்து இந்த ஆண்டு இறுதிக்குள், மேலும் இரண்டு போர்க்கப்பல்கள் ஜப்பான் அனுப்பிவைக்கப்படும் என்றும் அவை ஆசியா-பசுபிக் சர்வதேச கடல் எல்லை பகுதியில் நிரந்தரமாக நிலை நிறுத்தப்படும் என்றும் டோக்கியோவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பிரித்தானிய பாதுகாப்புத் துறை அமைச்சர் பென் வாலஸ் (Ben Wallace) தெரிவித்தார்.
இந்த போர்க்கப்பல்கள் ஜப்பான் துறைமுகத்தின் அருகில் உள்ள சர்வதேச கடல் எல்லையில் கண்காணிப்பில் ஈடுபடும் என்று தெரிவித்த அவர், தென் சீன கடல் பகுதியிலும் செல்லும், சர்வதேச கடல் எல்லையில் எங்கள் போர்க்கப்பல் செல்வதற்கு எந்த தடையும் இருக்காது என்று தெரிவித்தார்.
தென் சீன கடலில் அதிகாரம் செலுத்துவதில் சீனாவுக்கும் அதன் அண்டைநாடுகளுக்கும் போட்டி நிலவி வரும் நேரத்தில், பிரிட்டனின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.