ரஷியாவில் 17 பேருடன் சென்ற மாயமான விமானம் கண்டுபிடிப்பு!
18 Jul,2021
ரஷியாவின் தன்னாட்சி பெற்ற பிராந்தியமான சைபீரியாவில் உள்ள கெட்ரோவ் நகரில் இருந்து டாம்ஸ்க் நகருக்கு நேற்று காலை ‘ஏஎன்-28′ ரக பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.
விமானத்தில் 4 சிறுவர்கள் உள்பட 14 பயணிகளும் 3 சிப்பந்திகளும் இருந்தனர்.
இந்த விமானம் டாம்ஸ்க் நகரில் தரையிறங்குவதற்கு சிறிது நேரமே இருந்த நிலையில் திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. ரேடார் பார்வையிலிருந்தும் அந்த விமானம் மறைந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மாயமான விமானத்தை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டன.
தேடுதல் வேட்டை தொடங்கிய சில மணி நேரத்தில் மாயமான விமானம் கண்டுபிடிக்கப்பட்டதாக ரஷியாவின் அவசரகால அமைச்சகம் அறிவித்தது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக அந்த அமைச்சகம் தெரிவித்தது.
எனினும் விமானத்தில் இருந்த 17 பேரும் காயங்கள் இன்றி உயிர் தப்பியதாகவும், அவர்கள் தற்போது நலமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 6-ந்தேதி ரஷியாவின் கம்சாட்கா தீபகற்பத்தில் இருந்து 28 பேருடன் சென்ற ‘ஏஎன்-26′ ரக பயணிகள் விமானம் தரையிறங்குவதற்கு முன்பு மாயமான நிலையில், பல மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின் அந்த விமானம் மலையில் மோதி விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 28 பேரும் பலியானது குறிப்பிடத்தக்கது.