அமெரிக்கா 'விசா' கெடுபிடி: கனடா செல்லும் இந்தியர்கள்
16 Jul,2021
அமெரிக்க அரசின் 'விசா' கெடுபிடிகள் காரணமாக, அங்குள்ள இந்திய நிபுணர்கள் கனடாவில் குடியேறி வருவதாக அந்நாட்டு பார்லி.,யில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க கொள்கைக்கான தேசிய கழகத்தின் செயல் இயக்குனர் ஸ்டூவர்ட் ஆண்டர்சன், குடியேற்றம் மற்றும் குடியுரிமை குறித்த ஆய்வறிக்கையை பார்லி., நீதிக் குழுவில் தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:அமெரிக்கா, காலத்திற்கு ஒவ்வாத குடியேற்றக் கொள்கையை கடைப்பிடித்து வருகிறது. இதனால் 20 ஆண்டுகளுக்கு மேலாக, வேலை அடிப்படையில் குடியுரிமை தரும் 'கிரீன் கார்டு' கிடைக்காமல் 20 லட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டினர் உள்ளனர்.
அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டு நிபுணர்களை பணிக்கு அமர்த்துவதற்கான, 'எச் - 1பி' விசா பெறுவதிலும் பல தடைகள் உள்ளன.இந்தாண்டு மார்ச் நிலவரப்படி, மூன்று லட்சத்திற்கும் அதிகமான எச் - 1பி விசா விண்ணப்பங்கள் வந்துள்ளன. ஆனால் ஆண்டுக்கு 85 ஆயிரம் விசாக்கள் தான் வழங்கப்படுகின்றன. இதனால் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான நிபுணர்களை அமெரிக்க நிறுவனங்கள் பணியமர்த்த முடியாத நிலை உள்ளது.
இதுபோன்ற காரணங்களால் அமெரிக்காவில் பணியாற்றும் திறமையான இந்திய வல்லுனர்கள், கனடாவுக்கு குடியேறி வருகின்றனர். இதற்கு, கனடாவின் தாராள விசா கொள்கையும் காரணம்.இதே நிலை நீடித்தால் அமெரிக்க நிறுவனங்களுக்கு தேவையான இந்திய வல்லுனர்களுக்கு பற்றாக்குறை ஏற்படும். அமெரிக்க அரசு விரைவாக செயல்பட்டு, இந்திய வல்லுனர்கள் கனடா செல்வதை தடுப்பதற்கான கொள்கைகளை வகுக்க வேண்டும்.
தவறினால் 2030ல், இந்திய வல்லுனர்களுக்கான பற்றாக்குறை அதிகரிக்கும். அமெரிக்க பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ள வெளிநாட்டு வல்லுனர்களின் குடியேற்றத்திற்கு உதவும் வகையில் கொள்கைகளை சீரமைக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.