நம்பமுடியாத அனுபவம்: விண்வெளி வீராங்கனை ஸ்ரீஷா பாண்ட்லா
13 Jul,2021
விண்வெளியிலிருந்து பூமியை பார்த்தது நம்பமுடியாத அனுபவம் என வெற்றிகரமாக தனது முதல் விண்கல பயணத்தை நிறைவு செய்து கொண்டு பூமிக்கு திரும்பிய இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை ஸ்ரீஷா பாண்ட்லா தெரிவித்துள்ளார்.
70 வயதான பிரிட்டனை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ரிச்சர்ட் பிரான்சன் நிறுவிய விண்வெளி சுற்றுலா நிறுவனமான விர்ஜின் கேலடிக்கின் 'யூனிட்டி22’ என்ற இந்த விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியது.
இந்த நிறுவனத்தில் பணியாற்றும் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ஸ்ரீஷா பாண்ட்லா (34) உள்ளிட்ட 6 போ் அந்த விண்கலத்தில் பயணம் செய்தனர். அதிகபட்சமாக 85 கிலோ மீட்டர் உயரத்தை எட்டியது இந்த யூனிட்டி விண்கலம். தொடர்ந்து, 'யூனிட்டி22’ விண்கலம் வெற்றிகரமாக தனது முதல் பயணத்தை நிறைவு செய்து பூமிக்கு திரும்பியது.
ஸ்ரீஷா பாண்ட்லா ஆந்திர மாநிலம், குண்டூா் மாவட்டத்தில் பிறந்து அமெரிக்காவில் வளா்ந்தவா். விண்ணிற்கு சென்று வந்தது குறித்த தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்ட ஸ்ரீஷா, இளம் வயதிலிருந்தே விண்வெளிக்கு பயணிப்பது குறித்து கனவு கண்டிருக்கிறேன். அந்தக் கனவு தற்போது நிறைவேறியுள்ளது. விண்வெளியிலிருந்து பூமியை பார்த்தது என்பது நம்பமுடியாத அனுபவம். அது, எனது வாழ்க்கையை மாற்றும் வியக்கத்தக்க அனுபவமாக இருந்தது.
ஆச்சரியத்தில் செய்வதறியாமல் தவிக்கிறேன். ஆனால், இங்கிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. என் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள வேறு வார்த்தையை தேடிக் கொண்டிருக்கிறேன். இந்த முழு பயணமும் எனக்கு ஆச்சரித்தை அளித்தது.
நான் விண்வெளி வீராங்கனையாக விரும்பிய போதிலும், என்னால் நாசாவிற்கு செல்ல முடியவில்லை. இதையடுத்து விண்வெளிக்குச் செல்ல நான் மாற்று பாதையை தோ்வு செய்துள்ளேன். வா்ஜின் கலாக்டிக் நிறுவனம் மூலம் விண்வெளிக்குச் செல்லும் அனுபவத்தை மேலும் பலா் பெறுவா் என்றார்.
பாா்வைத்திறன் தொடா்பான தோ்வில் தோ்ச்சி பெற முடியாததால் நாசாவில் விண்வெளி வீராங்கனை ஆவதற்கான தகுதிகளை ஸ்ரீஷா பாண்ட்லாவால் பூா்த்தி செய்ய முடியவில்லை.
கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் ஆகியோருக்கு பிறகு விண்வெளிக்கு சென்ற மூன்றாவது இந்திய வம்சாவளி வீராங்கனை ஸ்ரீஷா என்பது குறிப்பிடத்தக்கது.