எப்படி இருக்கிறார் போப் பிரான்சிஸ்?
09 Jul,2021
'குடல் அறுவை சிகிச்சைக்கு பின், போப் பிரான்சிஸ், 84, உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது' என, வாடிகன் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் குடலில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக வயிற்று வலியால் பாதிக்கப்பட்டார். அவருக்கு கடந்த 4ம் தேதி, ஐரோப்பிய நாடான இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள மருத்துவமனையில், குடல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்நிலையில், போப் பிரான்சிஸ் உடல் நிலை குறித்து வாடிகன் செய்தி தொடர்பாளர் கூறியதாவது: குடல் அறுவை சிகிச்சைக்கு பின், போப் பிரான்சிஸுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. எனினும், பரிசோதனையில் அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
இப்போது காய்ச்சல் குறைந்து விட்டது. அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதுடன், உணவு சாப்பிடவும் துவங்கி உள்ளார். மருத்துவமனையிலேயே மேலும் சில நாட்கள் ஓய்வெடுப்பார். இவ்வாறு அவர் கூறினார்.