ரஷ்ய விமான விபத்தில் 19 பேரின் உடல்கள் மீட்பு
08 Jul,2021
ரஷ்யாவின் கம்சட்காவில், நேற்று முன்தினம் பயணியர் விமானம் விபத்தில் சிக்கியது. இதில் பலியான, 19 பேரின் உடல்கள், இதுவரை மீட்கப்பட்டு உள்ளன.
ரஷ்யாவின் பெட்ரோபாவ்லோவ்ஸ்க் -கம்சாட்ச்கி நகரில் இருந்து, கம்சட்கா தீபகற்பத்தின் பாலானா நகருக்கு, 22 பயணியருடன் நேற்று முன்தினம் ஒரு விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில், விமானிகள் உட்பட ஆறு பேர் பணியில் இருந்தனர். பாலானாவில் தரையிறங்கும் முன், மோசமான வானிலை காரணமாக கடற்பகுதியில் உள்ள மலைக்குன்றில் மோதி விமானம் விபத்துக்குள்ளானது.
இதனால், விமானத்தில் இருந்த பாலானா நகரசபை தலைவர் ஓல்கா மொகிரேவா உட்பட, 28 பேரும் பலியானது உறுதியானது. தேடுதல் பணிகள் உடனடியாக துவங்கிய நிலையில், பலியான, 19 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. மீதமுள்ளோரின் உடல்களை தேடும் பணிகள் தொடர்கின்றன. பலியானோருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், கம்சட்காவில் மூன்று நாள் அரசுமுறை துக்கம் அனுஷ்டிக்கப்படும் என, அதிகாரிகள் கூறினர்.
பலியானோர் குடும்பத்தினருக்கு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இரங்கல் தெரிவித்து உள்ளார்.விமான நிறுவன இழப்பீடு, பயண காப்பீடு மற்றும் அரசின் உதவித்தொகை என, பலியானோர் குடும்பத்தினருக்கு தலா, 45 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.