கோவிட் தடுப்பூசியால் ஏற்படும் அரிய வகை ரத்தம் உறைதலுக்கு சிகிச்சை: கனேடிய விஞ்ஞானிகள் அசத்தல்!
04 Jul,2021
கொரோனா தொற்றுக்கு எதிராக பல்வேறு மருந்து நிறுவனங்கள் தயாரித்துள்ள தடுப்பு மருந்துகள், உலக சுகாதார மையத்தின் அறிவுறுத்தல்படி, பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஆக்ஸ்போர்டு மற்றும் அஸ்ட்ராஜெனகா நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள தடுப்பூசியால் அரிதான ரத்தம் உறைதல் போன்ற பக்க விளைவுகள் ஏற்படுவதாக பல்வேறு நாடுகளில் கண்டறியப்பட்டன.
இந்த தடுப்பூசி இந்தியாவிலும் கோவிஷீல்டு என்ற பெயரில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசியால் ஏற்படும் மேற்படி அரிய ரத்தம் உறைதலுக்கான சிகிச்சையை கனடாவின் மெக்மாஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
அந்தவகையில் ரத்தம் உறைதலுக்கு எதிரான மருந்துகள், இன்ட்ரெவனஸ் இம்யூனோகுளோபூலின் இணைந்த கலவையை இந்த விஞ்ஞானிகள் பரிந்துரைத்து உள்ளனர்.
இந்த சிகிச்சையால், மேற்படி ரத்தம் உறைதல் ஏற்பட்ட 3 நோயாளிகள் குணமடைந்து இருப்பதாக மருத்துவத்துக்கான 'தி நியூ இங்கிலாந்து' பத்திரிகையில் விவரிக்கப்பட்டு இருக்கிறது. 63 முதல் 72 வயதுக்கு இடைப்பட்ட இந்த நோயாளிகளில் ஒருவர் பெண் ஆவார். இதில் இருவருக்கு காலில் ரத்தம் உறைதல் ஏற்பட்டிருந்த நிலையில் ஒருவருக்கு மூளையில் ரத்தம் உறைந்தது குறிப்பிடத்தக்கது.