ஆப்கானின் முக்கிய விமான நிலையத்தை விட்டு அமெரிக்க- நேட்டோ படைகள் வெளியேறின!
03 Jul,2021
அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள், ஆப்கானிஸ்தானில் உள்ள பாக்ராம் விமான நிலையத்தை விட்டு வெளியேறிவிட்டன.
ஆப்கானிஸ்தானில் இருந்து வெளிநாட்டு சக்திகளை முழுமையாக வெளியேற்றும் முக்கிய நடவடிக்கையாக இது பார்க்கப்படுகின்றது.
தலிபான் மற்றும் அல்கொய்தாவுக்கு எதிரான போரின் மையமாக 20 ஆண்டுகளாக உள்ள பாக்ராம் விமான நிலையத்தை விட்டு துருப்புக்கள் வெளியேறியிருப்பது அரசாங்கத்துக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடுமென எச்சரிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் 11ஆம் திகதிக்குள் அமெரிக்கப் படைகள் போய்விடும் என்று ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
‘செப்டம்பர் 11’ காலக்கெடு 2001ஆம் ஆண்டு அமெரிக்கா மீதான அல்-கொய்தா தாக்குதலின் ஆண்டு நிறைவாகும். இந்த தாக்குதலில் கிட்டத்தட்ட 3,000 பேர் உயிரிழந்தனர். இதுவே ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தலைமையிலான படையெடுப்பைத் தூண்டியது.
சுமார் 2,500- 3,500 அமெரிக்க துருப்புக்கள் சமீப காலம் வரை ஆப்கானிஸ்தானில் இருப்பதாக கருதப்பட்டது. மேலும் அவர்கள் 7,000 நட்பு வெளிநாட்டு துருப்புக்களுடன் வெளியேற உள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் சர்வதேச விமான நிலையத்தை பாதுகாப்பதே ஒருங்கிணைந்த படையின் மீதமுள்ள பணிகளில் ஒன்றாகும். அதன் எதிர்கால பாதுகாப்பு குறித்து பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன.
வெளிநாட்டுப் படைகள் வெளியேறிய பின்னர் ஒரு புதிய உள்நாட்டுப் போர் வெடிக்கக்கூடும் என்ற அச்சத்தின் மத்தியில் தலிபான் போராளிகள் டசன் கணக்கான மாவட்டங்களை ஆக்கிரமித்துள்ளனர்.